கம்பத்தில் கவரிங் நகை கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் கவரிங் நகைக் கடைக்காரர் வீட்டில் நகை திருடிய கட்டடத் தொழிலாளி மற்றும்
தேனி மாவட்டம், கம்பத்தில் கவரிங் நகைக் கடைக்காரர் வீட்டில் நகை திருடிய கட்டடத் தொழிலாளி மற்றும் சமையல் தொழிலாளி ஆகிய இருவரையும், 4 மாதங்களுக்குப் பிறகு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கம்பம் சின்னவாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (58). இவர், இங்குள்ள வேலப்பர் கோயில் தெருவில் கவரிங் நகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 21 இல் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் அருகில் உள்ள முத்தாலம்மன் கோயில் விழாவுக்குச் சென்றுவிட்டு, ஆகஸ்ட் 24-இல் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உடனே, உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது, அதிலிருந்த 34 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி ஈஸ்வரன் (44), கட்டடத் தொழிலாளி வேல்முருகன் (24) ஆகியோரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீஸார் அவர்களிடமிருந்து செவ்வாய்க்கிழமை 13 பவுன் நகைகளை மட்டும் கைப்பற்றினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த ஆகஸ்ட் 24-இல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டபோது, ஈஸ்வரன் வீட்டின் முன்பு அது சிறிது நேரம் நின்றுவிட்டுச் சென்றது. இதனால், குற்றப்பிரிவு போலீஸார் ஈஸ்வரனின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.
ஈஸ்வரனை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்து வந்து, இரவில் வீட்டுக்கு அனுப்பி வைத்து மறுநாள் காலை மீண்டும் விசாரணைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் மறுநாள் விசாரணைக்கு வராமல் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈஸ்வரன் தற்கொலைக்கு முயன்றதால் போலீஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீடு திரும்பிய ஈஸ்வரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஈஸ்வரன் மது அருந்தியுள்ளார். அப்போது, கவரிங் நகைக் கடைக்காரர் வெளியூர் சென்றிருப்பதாகவும், அவரது வீட்டில் நகை, பணம் இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதையடுத்து, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகிய இருவரும் அன்று இரவே பூட்டை உடைத்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டனர் எனத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.