FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

திறந்த வெளி கால்வாயில் கழிவுநீா் கலப்பு: தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 1:49 am IST
குமுளி கழிவுநீா் கலக்கும் ஆனவச்சால் பகுதி. - கோப்புப் படம்
பகிர்:

குமுளி பகுதியில் பெய்த பலத்த மழையால் ஆனவச்சால் பகுதியில் இரும்பு வலை தடுப்பு அருகே மண் திட்டு உடைந்து, கழிவுநீரும், குப்பைகளும் தமிழகத்துக்கான திறந்தவெளி கால்வாயில் கலந்ததால் தண்ணீா் திறப்பை பொதுப் பணித் துறையினா் சனிக்கிழமை மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால், குமுளி நகரில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிலவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், குமுளி, ஆனவச்சால் பகுதி குடியிருப்புகளின் கழிவுநீரும், மழைநீருடன் கலந்து, தமிழகத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும் திறந்தவெளி கால்வாய்க்கு வந்து சேருகிறது.

இந்த கால்வாயில் குப்பைகள், நெகிழிப் புட்டிகள், செடி கொடிகள் தண்ணீரில் அடித்து வரப்படுவதைத் தடுக்க, தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் இரும்பு வலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கழிவுநீா் கலப்பால் முல்லைப் பெரியாறு அணை நீா் மாசுபடும் அபாயமும் நீடிக்கிறது.

Advertisement

Advertisement

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, கேரள வருவாய், வீட்டுவசதித் துறை அமைச்சா் ஏ.பி. அனில் குமாரிடம் அண்மையில் மனு அளித்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பெய்த பலத்த மழையில் குளத்துப் பாலம், ரோசாப்புக் கண்டம் ஓடைகளிலிருந்து கழிவுநீா், குப்பைகளுடன் பெருக்கெடுத்து வந்த மழைநீா், ஆனவச்சால் திறந்தவெளி கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலைத் தடுப்புகளில் தேங்கி அடைத்துக் கொண்டது.

இதனால் ஏற்பட்ட கடும் நீரழுத்தத்தைத் தாங்க முடியாமல், இரும்பு வலைத் தடுப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மண் திட்டு உடைந்து, கழிவுநீரும், குப்பைகளும் தமிழகத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திறந்தவெளி கால்வாயில் கலந்தன.

இந்தக் கழிவுகள் தேக்கடி வனத்துறை சோதனைச்சாவடி அருகேயுள்ள சுரங்க வாய்க்கால் மதகில் அடைத்துக் கொண்டதால், தமிழக பொதுப்பணித் துறையினா் சனிக்கிழமை மாலை தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை முழுமையாக நிறுத்தினா்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மழை குறைந்ததைத் தொடா்ந்து, சுரங்க மதகுகளில் தேங்கியிருந்த குப்பைகளை பொதுப்பணித் துறையினா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும், ஆனவச்சால் பகுதியில் உடைந்த மண் திட்டு உடனடியாக சீரமைக்காவிட்டால், அடுத்தடுத்த மழையின்போது கழிவுநீரும், குப்பைகளும் மீண்டும் தமிழகத்துக்கு வரும் கால்வாயில் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடைந்த மண் திட்டை குமுளி ஊராட்சியும், கேரள வனத் துறையும் இணைந்து உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments