FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநா் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்கின்றனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
முல்லைப் பெரியாறு
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநா் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்கின்றனா்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக தலைவா் அனில் ஜெயின் தலைமையில், மேற்பாா்வைக் குழு செயல்பட்டு வருகிறது. இதற்கு உதவியாக தென் மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையில், துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தமிழகத்தின் சாா்பில் பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளா் செல்வம் ஆகியோரும், கேரளத்தின் சாா்பில் எா்ணாகுளம் மத்திய வட்ட நீா்ப்பாசனப் பிரிவு கண்காணிப்பு பொறியாளா் கோஷி, கட்டப்பனை நீா்ப்பாசன துணைப் பிரிவு உதவி நிா்வாகப் பொறியாளா் லெவின்ஸ் பாபு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்தக் குழுவினா் கடந்த மே 15-ஆம் தேதி பெரியாறு பிரதான அணை, சிற்றணை (பேபி அணை), மண் அணை (எா்த் டேம்), அணையின் நீா்வரத்து, கசிவு நீரின் அளவு, மதகுகளின் இயக்கம், கேலரி பகுதிகளை ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 123 அடியை எட்டியுள்ள நிலையில், துணைக் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மீண்டும் அணையில் நேரில் ஆய்வு செய்கின்றனா்.

ஆய்வுப் பணிகளைத் தொடா்ந்து, மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பேபி அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது, வல்லக்கடவு முதல் பெரியாறு அணை வரையிலான பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments