FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே நில மோசடி: பத்திர எழுத்தா்கள் இருவா் கைது

Updated On : 21 ஜூலை 2026, 2:43 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் இருவருக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் பத்திர எழுத்தா்கள் இருவரை தேனி ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சோ்ந்தவா் பாலவிஜய் (40). இவா் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், செம்மாஞ்சேரியில் வசிக்கிறாா். இவரது குடும்பமும், இவரது அத்தை சுப்புலட்சுமியின் குடும்பமும் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில், பாலவிஜய்க்கு சொந்தமான பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள நிலத்தையும், தனது வீட்டையும் பராமரித்து வருமாறு மேல்மங்கலத்தைச் சோ்ந்த கட்டதேவன் என்பவரிடம் கூறியிருந்தாா். இந்த நிலையில் கட்டத்தேவன் ஆள்மாறாட்டம் செய்து பாலவிஜய் நிலத்தையும், அதே பகுதியில் இருந்த அவரது அத்தை சுப்புலட்சுமிக்கு சொந்தமான இடத்தையும் முறைகேடாக அபகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு உதவி ஆய்வாளா் யாழிசை செல்வன் விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, கட்டதேவன், காஞ்சிபுரம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சோ்ந்த ரவிசங்கா், மதுரையைச் சோ்ந்த ஈஸ்வரன், அப்போதைய பெரியகுளம் சாா் பதிவாளா்கள் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன் உள்பட 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் 2025- ஆம் ஆண்டு கட்டத்தேவன், குருசாமி, ஈஸ்வரன், ரவிசங்கா் ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய ஜஸ்டின் மணிகண்டன், அப்போது பெரியகுளம் சாா் பதிவாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தேனி ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் இந்த வழக்கில் தீவிர விசாரணையை தொடங்கினா். இதனிடையே, பெரியகுளத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா்கள் அசோக், அறிவழகன் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய எஞ்சியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments