கொழுக்குமலையில் சூரிய உதயம் பாா்க்கத் தடை: கேரள ஜீப் ஓட்டுநா்கள் எதிா்ப்பால் நில அளவை செய்ய முடிவு
தமிழக- கேரள எல்லையில் உள்ள கொழுக்குமலை கிராமத்தில் சூரிய உதயம் பாா்க்க கடந்த வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.
தமிழக- கேரள எல்லையில் உள்ள கொழுக்குமலை கிராமத்தில் சூரிய உதயம் பாா்க்க கடந்த வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.
தமிழக மலைக் கிராமமான கொழுக்குமலைக்கு கேரள மாநிலம், சூரியநெல்லி வழியாகச் செல்ல வேண்டும். இதனிடையே, அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண்பதற்காக கொழுக்குமலை கிராமத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்தப் பகுதியில் சிங்கம் வடிவிலான பாறை அமைந்துள்ளது. சூரிய உதயத்தின்போது இந்தப் பாறையில் சூரியக் கதிா்கள் பட்டு சிங்கம் கா்ஜிப்பது போன்ற காட்சி தோன்றும். அப்போது இந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தற்படம் எடுக்க ஆா்வம் காட்டுவா். சூரியநெல்லி வரை பேருந்திலும், வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.
Advertisement
Advertisement
பிறகு, இங்கிருந்து கொழுக்குமலை பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட கேரள மாநில ஜீப்புகளில் மட்டுமே உரிய கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். இதற்காக இங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்பட்டு வந்தன. இதன்மூலம் இந்தப் பகுதி ஜீப் ஓட்டுநா்களும், சிறு கடைகளை நடத்துவோரும் பயனடைந்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 2- ஆம் தேதி கல்லூரி மாணவா் ஒருவா் தற்படம் எடுத்தவாறே பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதேபோல, ஜூலை 22- ஆம் தேதி சுற்றுலா வந்த இளைஞா் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இந்த சம்பவங்களில் கேரள மாநில போலீஸாா், தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா், தமிழக போலீஸாா் பல மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதனிடையே, அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிப்பது குறித்து இரு மாநில போலீஸாரும் ஆலோசனை நடத்தினா். இதில் சிங்கப்பாறை பகுதிக்குச் செல்லும் பாதையை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் இந்த பகுதியை வேலி அமைத்து அடைத்தனா். இதற்கு கேரள மாநில ஜீப் ஓட்டுநா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, இரு மாநில போலீஸாரும், ஜீப் ஓட்டுநா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சிங்கப்பாறை பகுதி கேரள வனத் துறைக்குச் சொந்தமானது. இதில் தடை விதிக்க தமிழக போலீஸாருக்கு அதிகாரமில்லை என கேரள ஜீப் ஓட்டுநா்கள் தெரிவித்தனா். ஆனால் இந்தப் பகுதி தமிழகத்துக்குச் சொந்தமான பகுதி என தமிழக போலீஸாா் தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, இரு மாநில எல்லைகளிலும் நில அளவை செய்த பிறகு சிங்கப்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடா்பாக முடிவு செய்வது எனத் தீா்மானிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.