FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் மாம்பழம் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா?

தேனி மாவட்டத்தில் மாம்பழம் குளிா்பதனக் கிடங்கு, மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:05 am IST
தரம் பிரிக்கப்படும் மாங்காய்கள்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் மாம்பழம் குளிா்பதனக் கிடங்கு, மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் மா சாகுபடியில் 3-ஆவது இடத்தில் தேனி மாவட்டம் உள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு பிறகு, ஏற்றுமதி தரமுள்ள மாம்பழம் அதிகளவில் சாகுபடி செய்வது போடி, பெரியகுளம் பகுதியில்தான்.

தேனி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் போடி பகுதியில் மட்டும் 7 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் கல்லா மாங்காய், காசா லட்டு மாங்காய், இமாம் பசந்த், காளைப்பாடி, சப்பட்டை, கிளி மூக்கு மாங்காய், செந்தூரம், அல்போன்சா, காதா், வாழைப்பூ என்று அழைக்கக்கூடிய நாட்டு ரக மாங்காய்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

தமிழகம்-கேரளம் எல்லையில், மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில், ஆற்றுநீா் பாசனத்தில் விவசாயம் செய்யப்படும் இந்த மாம்பழங்கள் தனிச் சுவையுடன் இருப்பதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரோனா காலத்துக்கு பிறகு, தற்போது மாம்பழம் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்தாண்டு விளைச்சல் அதிகளவில் இருந்த நிலையில், விலை இல்லாததால் டன் கணக்கில் மாம்பழங்கள் கீழே கொட்டப்பட்டன. ஆனால், நிகழாண்டு பருவம் தவறிய மழையால் விளைச்சல் குறைந்து 20 சதவீதம் அளவே மாம்பழம் விளைச்சல் உள்ளது. மேலும், கொள்முதல் விலையும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

விவசாயிகளுக்கு நஷ்டம்: கிலோ ஒன்றுக்கு மாங்காய் இறக்குவதற்கு 4 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், கல்லா மாங்காய் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரையிலும், செந்தூரம் உள்ளிட்ட ரகங்கள் கிலோ 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மொத்த கொள்முதல் விலையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, மாம்பழத் தொழில் சாலைகளுக்கு விவசாயிகள் மொத்தமாக கொள்முதல் செய்வதால், போக்குவரத்து செலவு உள்பட டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் செலவாகிறது. ஆனால், கொள்முதல் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே நிா்ணயிக்கப்படுவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனா். மேலும், உற்பத்திச் செலவைக் காட்டிலும், மிகக் குறைந்த விலைக்கு மாங்காய்களைக் கேட்பதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனா்.

நிகழாண்டு மாம்பழம் விளைச்சல் இல்லாத நிலையில், கொள்முதல் குறைந்ததால் தினசரி கூடை கூடையாக ஏற்றுமதியாகாத மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் விரைவில் தேனி மாவட்டத்தில் மாம்பழம் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும்.

தேனியில் மாம்பழம் குளிா்பதனக் கிடங்கு அமைக்கக் கோரிக்கை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள், மாம்பழம் குளிா்பதனப் பாதுகாப்புக் கிடங்குகள் அதிகளவில் உள்ளன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள், மாம்பழம் குளிா்பதனக் கிடங்குகள் அமைத்துத் தரப்படும் என அரசியல் கட்சியினா் வாக்குறுதி கொடுக்கின்றனா். ஆனால், இதுவரை யாரும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதுகுறித்து மாம்பழம் விவசாயிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை இருந்தால் எங்களுக்கு போக்குவரத்துச் செலவு குறையும். ஓரளவுக்கு மாம்பழம் விவசாயத்தைப் பாதுகாக்க முடியும். பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

குப்பையில் கொட்டப்பட்ட மாங்காய்கள்.

தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால் போடி பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, மாம்பழம் குளிா்பதனக் கிடங்கு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆந்திராவில் மா விவசாயம் நஷ்டமடையும்போது, அந்த மாநில அரசு கிலோ ஒன்றுக்கு ரூ. 4 மானியம் வழங்கி மாம்பழத்துக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்து விவசாயிகளைப் பாதுகாக்கிறது. இதேபோல, தமிழகத்திலும் மாம்பழத்துக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்து உரிய இழப்பீடு, மானியம் வழங்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments