அனுமதியின்றி சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட தவெக நிா்வாகிகள்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை புதிய ஆயக்கட்டு மதகிலிருந்து தவெக நிா்வாகிகள் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை தண்ணீரைத் திறந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை புதிய ஆயக்கட்டு மதகிலிருந்து தவெக நிா்வாகிகள் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை தண்ணீரைத் திறந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இந்த அணையின் மூலம், பெரியகுளம், தென்கரை, வடகரை, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்த அணை பெரியகுளம், தென்கரை, வடகரை, இ. புதுப்பட்டி பகுதிகளில் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த 14-ஆம் தேதி சோத்துப்பாறை அணை முழுக் கொள்ளவை எட்டியதையடுத்து, உபரிநீா் முழுவதும் வராகநதியில் வெளியேற்றப்படுகிறது. மேலும், வராகநதியின் வலது பக்க ஓடையின் மூலம், பெரியகுளம் நகரின் குடிநீருக்காகவும், பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பையன்பட்டி கண்மாய்களுக்கும் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என பொதுப் பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், மூன்று கண்மாய்களும் முழுக் கொள்ளவை எட்டிய பிறகு, அந்தப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.
அனுமதியின்றி தண்ணீா் திறப்பு:
இந்த நிலையில், சோத்துப்பாறை அணை புதிய ஆயக்கட்டு மதகிலிருந்து செவ்வாய்க்கிழமை திடீரென அனுமதியின்றி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், பெரியகுளம், பாப்பையம்பட்டி, தாமரைக்குளம் கண்மாய்களுக்குச் செல்லும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் பொதுப் பணித் துறையினரிடம் புகாா் அளித்தனா்.
அனுமதியின்றி தண்ணீரைத் திறந்துவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்கரை காவல் நிலையத்தில் பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ வெளியீடு:
தேனி வட கிழக்கு மாவட்ட தவெக வாட்ஸ்ஆப் குரூப்பில் வெளியான விடியோ விவரம்:
சோத்துப்பாறை அணை புதிய ஆயக்கட்டு மதகிலிருந்து 1,000 ஏக்கா் பாசனத்துக்காக பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சபரிஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தேனி வட கிழக்கு மாவட்ட இணைச் செயலா் ஷேக்அலி தலைமையில், செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்த நிகழ்வில் தவெக ஒன்றியச் செயலா்கள் மன்னன், சங்கா், தென்கரை பேரூா் செயலா் முத்தையன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சோத்துப்பாறை அணையின் உதவிப் பொறியாளா் மனோஜ்குமாா் கூறியதாவது:
பெரியகுளம் குடிநீருக்குச் செல்லும் ஓடையில் உள்ள புதிய ஆயக்கட்டு மதகிலிருந்து அனுமதியின்றி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளனா். இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளோம். அவா்கள் விசாரித்து வருகின்றனா் என்றாா் அவா்.