FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் திறந்த தவெகவினரைப் பற்றி...

53 வினாடிகள் முன்பு
சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட தவெகவினர்.
பகிர்:

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவைச் சேர்ந்த சிலர் திறந்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. 126.28 அடி கொண்ட இந்த அணை தேன்கரை, தாமரைக்குளம், கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்காவும் பெரியகுளம் நகரத்தின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

Advertisement

Advertisement

சோத்துப்பாறையை அணையின் நீர்ப்பாசனத்திலிருந்து தேனி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 2900 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பயன்படுகின்றன.

மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட அணைகளின் கீழ் உள்ள சோத்துப்பாறை அணை வழக்கமாக மாநில அரசின் உத்தரவுப்படி திறக்கப்படுவதே நடைமுறையாகும். அந்த நடைமுறையின்படி, அணையிலிருந்து அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர் தண்ணீரைத் திறந்து வைப்பர்.

அக்டோபர் மாதத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், அணையில் போதிய மழை மற்றும் நீர்வரத்து இல்லாததால் விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் வடகிழக்குப் பருவமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் இருந்த நிலையில், நேற்று காலை எந்தவொரு அரசு அதிகாரிக்கும் தெரியாமல், தவெக நிர்வாகிகள் சிலர் பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து 1000 ஏக்கர் விவசாய பாசனத்திற்காக ஆயக்கட்டு புது வாய்க்காலிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர்.

அதன்பின்னர், பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தேனி வடகிழக்கு மாவட்ட இணை செயலர் ஷேக் அலி தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அதனை ரீல்ஸாகவும் பதிவிட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்காமல், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெகவினர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தவெகவினரே அணையைத் திறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நீரை திறந்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறந்த நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சியினர் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

summary

An incident in which some individuals associated with TVK opened the Sothupparai Dam in Theni—without the knowledge of the authorities—has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.