சோத்துப்பாறை அணை திறப்பு: தவெகவினர் மீது புகார்
சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து...
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த, தவெகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணை பெரியகுளம், தென்கரை, எ.புதுப்பட்டி, தாமரைக்குளம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாகவும் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
கொடைக்கானல் பேரிஜம் ஏரி, அகமலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் வராகநதி வழியாக வந்து சோத்துப்பாறை அணையை வந்தடைகிறது. இந்த அணையின் மூலம் பெரியகுளம், தென்கரை, வடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்களும், இதைச் சுற்றி வசிக்கும் 2 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அகமலைப் பகுதியில் போதிய மழை இல்லை. இதனால், அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
மொத்தம் 126.26 உயரமுள்ள அணையின் நீர்மட்டம் கடந்த அக். 1-ஆம் தேதி 59.04 அடியாக குறைந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், அகமலைப் பகுதியில் பெய்த மழையால், அணைக்கு நீர் வரத்து உயர்ந்து, முழு கொள்ளவை எட்டியது.
இந்த நிலையில், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் இருந்த நிலையில், நேற்று காலை எந்தவொரு அரசு அதிகாரிக்கும் தெரியாமல், தவெக நிர்வாகிகள் சிலர் பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து 1000 ஏக்கர் விவசாய பாசனத்திற்காக ஆயக்கட்டு புது வாய்க்காலிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர்.
பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தேனி வடகிழக்கு மாவட்ட இணை செயலர் ஷேக் அலி தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அதனை ரீல்ஸாகவும் பதிவிட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்காமல், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெகவினர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சோத்துப்பாறை அணையை திறந்ததாக விடியோ வெளியிட்ட தவெகவினர் மீது பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் மனோஜ் புகார் மனு அளித்துள்ளார்.
சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டு, அதனை விடியோ எடுத்து வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.