மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி! புகார் அளிக்கப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து...
தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் அவர் மீது போஸ் (POSH) சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, சென்னையில் தவெக எம்எல்ஏ-க்களை நேரில் சந்தித்து பேசிய முதல்வர் விஜய், அருள் விக்னேஷை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இதுவரையில் அருள் விக்னேஷ் மீது காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவில்லை.
எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும்பட்சத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்கும், புகார்களை விசாரிக்கவும் போஸ் சட்டம் வழிவகை செய்கிறது.
பணியிடங்களில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் அளிக்கும் தொல்லைகளுக்கு எதிராக போஸ் சட்டத்தின்கீழ் உள் விசாரணைக் குழு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வோர் உள் விசாரணைக் குழுவுக்கும் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியரே தலைவராக இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே புகார்தாரராக இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அரசு அல்லது சட்டப்பேரவை மூலமாக முறையிடலாம். அல்லது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் அளிக்கலாம்.
ஓர் அரசு அதிகாரிக்கு தனிப்பட்ட முறையில் எம்எல்ஏ ஒருவர் தொல்லை அளித்து, நிரூபிக்கப்பட்டால், அது போஸ் சட்டத்தின்கீழ் வருவதுடன் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின்கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், எம்எல்ஏ குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் முறையான புகார்கள் எதுவும் இதுவரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.