தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி காவல்துறை டிஜிபியிடம் திமுக சார்பில் நேரில் புகார்...
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி காவல்துறை டிஜிபியிடம் திமுக சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி அது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எம்எல்ஏவுக்கு எதிராக அரசியல் தலைவர்களும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆனால், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனினும் தவெக எம்எல்ஏவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை டிஜிபியிடம் திமுக சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு பாலியல் தொல்லை அளித்தல், ஆபாசமான மின்னணுச் செய்திகளை அனுப்புதல், அரசு ஊழியரை மிரட்டுதல் மற்றும் அவரது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷ் (தமிழக வெற்றிக் கழகம்) மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்தவும் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், மாவட்ட ஆட்சியருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் கோரி திருக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.
மனுவில் "கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பிஎன்எஸ், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1998 ஆகியவற்றின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்;
விசாரணையைக் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திற்குக் குறையாத ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் தலைமையிலும், தங்களின் மேலான அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பிலும் விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும்;
குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினரின் கைபேசிகள் மற்றும் பிற மின்னணுச் சாதனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தவும்
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி (CCTV) காட்சிகள், பார்வையாளர் பதிவேடுகள் மற்றும் பாதுகாப்புப் பதிவேடுகளை உடனடியாகப் பறிமுதல் செய்து பாதுகாக்கவும், பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் சம்மதத்துடன் மட்டுமே, அவர் விரும்பும் இடத்தில், ஒரு பெண் காவல்துறை அதிகாரியால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; மேலும் அவர் விரும்பினால், பிஎன்எஸ்எஸ் பிரிவு 183-ன் கீழ் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும்
மேலும், விசாரணையை விரைவாக முடித்து, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தகுந்த காலத்திற்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.