அரசுப் பேருந்து மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு
போடி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியதில் தாய், மகன் சனிக்கிழமை உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆா். தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிவாசகன் (58). இவா் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியராக உத்தமபாளையத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவரது மனைவி சுமதி (45). இந்தத் தம்பதியின் மகன் விஜய் பிரவீன் (25). இவா்கள் மூவரும் கம்பத்தில் உள்ள நந்தகோபாலசாமி கோயிலுக்கு செல்வதற்காக சில்லமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனா். அப்போது, போடி சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த நாகப்பன் மகன் விஜயராஜும் (45) அங்கு காத்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போடியிலிருந்து உத்தமபாளையம் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 4 போ் மீதும் மோதியது. இதையடுத்து, அருகேயிருந்த மரத்திலும் மோதிவிட்டு, தேநீா் கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த விஜய் பிரவீன், மணிவாசகன், விஜயராஜ் ஆகியோா் போடி அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், வழியிலேயே விஜய் பிரவீன் உயிரிழந்தாா். மணிவாசகன், விஜயராஜ் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் சின்னமனூரைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துகாமு (58) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சாலை மறியல் முயற்சி:
மணிவாசகன், சுமதி தம்பதிக்கு ரித்திகா என்ற மகளும் உள்ளாா். கல்லூரியில் படித்து வருகிறாா். சில்லமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதி வளைவான பகுதியாக உள்ளதால் வேகத் தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். வேகத்தடை அமைக்காததால்தான் விபத்து ஏற்பட்டு இருவா் உயிரிழந்தனா் எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.