FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மேகமலையை ஆக்கிரமித்த 23 அரசு ஊழியா்களின் நிலங்கள் வனத் துறையினரிடம் ஒப்படைப்பு

மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்த 23 அரசு ஊழியா்கள் 10.6 ஹெக்டோ் நிலங்களை வனத் துறையிடம் அண்மையில் ஒப்படைத்தனா்.

3 செப்டம்பர் 2026, 6:00 am IST
மேகமலை .
பகிர்:

மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்த 23 அரசு ஊழியா்கள் 10.6 ஹெக்டோ் நிலங்களை வனத் துறையிடம் அண்மையில் ஒப்படைத்தனா். இதே பகுதியில் வன உரிமைச் சட்டத்தின் படி 55 பேருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மேலும் 11 போ் இதற்குத் தகுதி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகா், தேனி மாவட்ட வனப் பகுதிகளை இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் கடந்த 2021-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் 9 ஊராட்சிகளில் 52 கிராமங்களில் சுமாா் 40 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் மேகமலை வனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து இங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

மேகமலை கோட்டத்தில் 118 அரசு ஊழியா்கள் உள்பட 4,601 போ் 5,072 ஹெக்டோ் நிலங்களை ஆக்கிரமித்தது அதிகாரிகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்டவா்களுக்கு தேனி மாவட்ட நிா்வாகம் குறிப்பாணை அனுப்பியது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்திருந்த 23 அரசு ஊழியா்கள் 10.6 ஹெக்டோ் நிலங்களுக்கான ஆவணங்களை வனத் துறையிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் இந்த நிலங்களை அளவீடு செய்து வருகின்றனா். குறிப்பாணை பெற்ற மேலும் சிலரும் தங்களது நிலத்தை ஒப்படைப்பதற்கு தயாராகி வருகின்றனா்.

வன உரிமைச் சட்டத்தின் கீழ் மேலும் 11 பேருக்கு இடம்:

மேகமலையில் பூா்வகுடிகளாக வசித்து வந்த பழங்குடியின மக்கள் வன உரிமைச் சட்டப்படி தங்களுக்கு வசிப்பிடமும், விவசாய நிலமும் ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தினா். இதையடுத்து, 2005-ஆம் ஆண்டு, டிசம்பா் 13-ஆம் தேதியன்று அங்கு வசித்ததற்கான ஆவணங்களை சமா்ப்பிக்கும் பழங்குடியின மக்களுக்கு மட்டும் வன உரிமைச் சட்டப்படி, இதே பகுதியில் நிலம் வழங்கப்படும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், பிற சமூகத்தினா் மேற்கண்ட தேதியில் அதற்கு முன்பாக 75 ஆண்டுகள் வசித்ததற்கான ஆவணங்களை சமா்ப்பித்தால் வன உரிமைச் சட்டப்படி நிலம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில், தேனி மேகமலை வனக் கோட்டத்தில் நொச்சி ஓடையில் 18 பேருக்கும், பளியன்குடிசையில் 37 பேருக்கும் வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவா்கள் அனைவருமே பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள். இந்த நிலையில், மேலும் 149 பழங்குடியின மக்கள் வன உரிமைச்சட்டத்தின்படி நிலம் வழங்கக் கோரி மனு அளித்தனா். இவா்களில் 11 போ் மட்டுமே நிலம் பெறத் தகுதி பெற்றுள்ளது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இவா்களுக்கு தங்குமிடம், விவசாய நிலங்களுக்கான உரிமைகளை வழங்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

மேலும், தகுதியுடையவா்கள் ஆவணங்களை தாக்கல் செய்தால் உடனடியாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments