ம.ரெட்டியபட்டி விவசாயிகளுக்கு கர்நாடகத்தில் களப்பயிற்சி
விருதுநகர் மாவட்டம் ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் களப்பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் களப்பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
ம.ரெட்டியபட்டி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் , நரிக்குடி ஆகிய வட்டாரங்களிலிருந்து தலா 4 விவசாயிகள் என மொத்தம் 20 விவசாயிகள் வெளி மாநில களப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற நேரடி களப்பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பியுள்ளனர். அவர்களை உள்ளூர் விவசாயிகள் திங்கள்கிழமை வரவேற்று கலந்துரையாடும் நிகழ்ச்சி வட்டார வேளாண்மை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது களப்பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய விவசாயிகள் கூறியதாவது:
கர்நாடக அரசு உதவியுடன் ரெய்ச்சூர் மாவட்டத்தில் நெட்ட பார்ம் மற்றும் ஜெயின் நிறுவனங்கள் மூலம் 74,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டுவரும் நுண்ணீர்ப் பாசன அமைப்புகளையும், விசாய உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் விளை பொருள்களுக்கு விற்பனை வசதி அமைத்தல், விளைபொருள்களை மதிப்புக்கூட்டுதல் செய்து விற்றல் ஆகியவை பற்றியும் அறிந்து கொண்டோம். ரெய்ச்சூர் வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது, பயிர்க் கழிவுகளை முறையாக மீண்டும் உரமாக்கி பயன்படுத்தி செலவுகளைக்குறைப்பது, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம்,இயற்கை வழி வேளாண்மை மற்றும் அங்ககப் பொருள்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும் சூரிய மின்சக்தி பயன்பாடு, இயற்கைப்பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு, உயிர்உரப்பயன்பாடு, வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல் ஆகியவை பற்றியும் ரெய்ச்சூர் பல்கலை செயல்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர் என்றனர்.
களப்பயிற்சி பெற்ற விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை ம.ரெட்டியபட்டி வட்டார தொழில்நுட்ப மேலாளர்முத்துக்கருப்பனும்,கர்நாடகத்தின் ரெய்ச்சூர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளரும் வேளாண்தொழில்நுட்பவியல்துறை தலைவருமான சுரவண கவுடா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் இத்தகவலைத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.