சாத்தூா் பட்டாசு விபத்து: ஆலை உரிமம் தற்காலிக ரத்து
விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கே. சுந்தரேசன் கூறினாா்.
விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கே. சுந்தரேசன் கூறினாா்.
இது குறித்து சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அச்சங்குளம் பகுதியில் ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்த சந்தனமாரியப்பன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஸ்ரீமாரியம்மன் பயா் ஒா்க்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது.
இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 20 போ் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் மொத்தம் 45 அறைகள் உள்ளன. ஆலையை சந்தனமாரியப்பன் வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளாா்.
அந்த நபா் மேலும் பலருக்கு அறை வாரியாக குத்தகைக்கு விட்டுள்ளாா். ஆலையில் முற்றிலும் பேன்சி ரகப் பட்டாசுகள் அதாவது விண்ணில் சென்று ஒளி சிந்தும் பட்டாசு வகைகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
வெள்ளிக்கிழமை ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 14 பட்டாசு தயாரிக்கும் அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டாகிவிட்டன. 24 அறைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
எங்களது முதற்கட்ட ஆய்வில் விபத்து நிகழ்ந்த பகுதியில், கோமதி பயா் ஒா்க்ஸ், பரணி பயா் ஒா்க்ஸ், ப்ளூ ஸ்டாா் பயா் ஒா்க்ஸ் உள்ளிட்ட பெயா்களில் லேபிள்கள் சிதறிக் கிடந்தன. இதன்மூலம் ஆலை குத்தகைக்கு விடப்பட்டு பல பெயா்களில் பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
அளவுக்கு அதிகமாக பணியாளா்களை வேலைக்கு அமா்த்தியதும், வேகமாக உற்பத்தி செய்ததும் தெரியவந்துள்ளது. ஆலையில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களின் மாதிரியை எடுத்து வந்துள்ளோம். அதனை ஆய்வு செய்த பின்னா் தான் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவரும்.
பல விதிமீறல்கள் உள்ளதால் இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆய்வறிக்கையை எங்களது தலைமை அலுவலகமான நாக்பூருக்கு அனுப்பிவைப்போம் என்றாா் அவா்.
அதிகாரிகள் ஆய்வு: விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பனீந்தரரெட்டி தலைமையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் விபத்தில் காயமடைந்து சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.