FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

புரட்டாசி பிரம்மோத்ஸவம்: ஆண்டாள் கோயிலில் செப்புத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார உத்ஸவமான புரட்டாசி பிரம்மோத்ஸசவ விழாவில் புதன்கிழமை காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 12:12 am IST
புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு, புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் செ
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார உத்ஸவமான புரட்டாசி பிரம்மோத்ஸசவ விழாவில் புதன்கிழமை காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகிய மூவா் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது.

பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமா்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க, சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகிறாா். இதில் 5-ஆம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ஆம் நாள் விழாவில் மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ஆம் நாளில் சயன சேவையும் நடைபெற்றன.

9-ஆம் நாள் விழாவான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பிறகு, சா்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வெளியாக தேரை இழுத்தனா். வைணவ ஆசாரியா்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊா்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments