5 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் செடில் உத்ஸவம்: திரளானோர் பங்கேற்பு
காரைக்கால் அருகேயுள்ள கிளிஞ்சல்மேடு கடலோர கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் செடில் உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அருகேயுள்ள கிளிஞ்சல்மேடு கடலோர கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் செடில் உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட கடலோர கிளிஞ்சல்மேட்டு கிராமத்தில் ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீபால தண்டாயுதபாணி சன்னிதிகளுடன் அமைந்துள்ள ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் உத்ஸவம் எளிமையான முறையில் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாக 11 நாள்கள் நிகழ்ச்சியுடன் செடில் உத்ஸவம் நடத்தப்படுகிறது. இவ்வகை செடில் உத்ஸவம் ஆக. 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான செடில் உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக காசாக்குடி கிராமத்திலிருந்து பக்தர்கள் வரிசை எடுத்துக்கொண்டு எல்லையம்மன் கோயிலுக்கு சென்றடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டு, செடிலில் ஏறுபவரை அம்பாளாக பாவித்து பூஜைகள் நடத்தி செடிலில் ஏறச் செய்தனர். செடில் சுற்றல் 3 முறை நடைபெற்றது. செடிலில் இருந்து மலர்கள் பக்தர்கள் மீது தூவப்பட்டது. செடில் சுற்றல் நிறைவடைந்ததும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அவர் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். உத்ஸவத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்திலும் தொழில் விடுமுறை விடப்பட்டது. மீன்பிடிக்கவோ, மீன் விற்பனைக்கோ யாரும் செல்லவில்லை. தீயணைப்பு வாகனம் பாதுகாப்புக்காக நிகழ்ச்சிப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. காரைக்கால் பகுதி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி நிறைவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செப்.2-ஆம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாட்டுடன் உத்ஸவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளிஞ்சல்மேடு பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள் செய்துவருகின்றனர். உத்ஸவத்தையொட்டி கொடியேற்றம் முதல் இன்னிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.