FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நகரத்துக்கு இணையாக கிராம மேம்பாட்டுத் திட்டம்: திருநள்ளாறில் ஓரிரு மாதங்களில் திட்டப் பணிகள் தொடங்கும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

நகரத்துக்கு இணையாக கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருநள்ளாறு பகுதியை மேம்படுத்தும் வ

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

நகரத்துக்கு இணையாக கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருநள்ளாறு பகுதியை மேம்படுத்தும் வகையிலான திட்டப் பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்கும் என  அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தெரிவித்தார்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ரூர்பன் மிஷன் என்கிற நகரத்துக்கு இணையாக கிராமப்புறத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் கிராமப்புற மேம்பாட்டுக்கு குறித்த நிதி ஒதுக்கீடு செய்வது இதன் முக்கிய அம்சமாகும். புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி பிராந்தியத்தில் பாகூர் மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் திருநள்ளாறு ஆகியவற்றில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் வகையில் இரு பகுதிகளையும் அரசு தேர்வு செய்தது.
ஏற்கெனவே பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு, திட்டப் பணிகள் நடத்த மதிப்பீடுகள் தயார் செய்திருந்த நிலையில், அரசுத்துறைகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தும் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமை வகித்தார். நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா,  புதுச்சேரி டி.ஆர்.டி.ஏ. அமைப்பின் திட்ட இயக்குநர் ரவிபிரகாஷ், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஏ. ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ரூர்பன் என்கிற நகரத்துக்கு இணையாக கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தில் திருநள்ளாறு தேர்ந்தெடுக்கப்பட்டது. 
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 30 கோடியும், மாநில அரசு ரூ. 116 கோடியில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டது. மத்திய அரசு தரும் நிதியில் தற்போது ரூ. 9 கோடி கிடைத்துள்ளது. கோயில் நகரத் திட்டம், கொம்யூன் பஞ்சாயத்து திட்டம், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட மாநில அரசின் பல்வேறு திட்ட நிதியாக இந்த ரூ.116 கோடி செலவிடப்படும்.
இந்த திட்டத்தின்படி, திருநள்ளாறில் 24 மணி நேரமும் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்தல், புதிதாக குடிநீர் மேல்நிலை தேக்கத்  தொட்டி கட்டுதல், வடிகால்களை மேம்படுத்துதல், சாலைகள் மேம்பாடு, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு வழங்கல், வேலை இல்லாதோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், தொழில்முனைவோருக்கான உதவி, தெருவிளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்காக மாற்றுதல், கால்நடை தீவன வளர்ப்பு செய்தல், குளிர் வசதியுடன் பால் பதனிடும் கிடங்கு அமைத்தல், கல்வித்துறையில் பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள் அமைத்தல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மேம்பாடு செய்தல் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது பொலிவுறு வகுப்பறைகள் அமைப்புக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் திருநள்ளாற்றில் ரூர்பன் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விடும். 3 ஆண்டுகளில் அனைத்தையும் நிறைவு செய்யும் இலக்கு இந்த திட்டத்துக்கு தரப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறைகள் இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ளதால், அவரவர்களுக்கான பணிகளை விரைந்து முடித்து திட்டங்களை செயல்வடிவத்துக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் 
அமைச்சர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments