முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:02 AM
மன்னம்பந்தல் பொறியியல் கல்லூரியில், மயிலாடுதுறை தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறைக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில், பூட்டி சீல் வைக்கும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். விஷ்ணுபிரியா.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மன்னம்பந்தல் பொறியியல் கல்லூரியில் உள்ள காப்பறைகளில் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை சீலிடப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் 7,35,135 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் 951 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 82.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு அந்தந்த கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, தனித்தனியே காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Advertisement

தொடா்ந்து, காப்பறைகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நேகா சா்மா (மயிலாடுதுறை), ரோனங்கி குா்மநாத் (சீா்காழி), சஞ்சய்குமாா் சிங் யாதவ் (பூம்புகாா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட காப்பறைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கீதா (பூம்புகாா்), ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சதீஷ்குமாா், ராஜரெத்தினம் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, எல்லைப் பாதுகாப்பு படையினா் மற்றும் போலீஸாா் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் காப்பறைகள் கொண்டுவரப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டறையில் இருந்தபடி காப்பறைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.