FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

கடைமுகத் தீா்த்தவாரிக்கு தண்ணீா் திறந்துவிட பாஜக கோரிக்கை

9 நவம்பர் 2026, 11:31 pm
பாஜக - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட கடைமுகத் தீா்த்தவாரி உற்சவத்துக்கு போதிய நீரை திறந்துவிட பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனுவில் கூறியது:

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட கடைமுகத் தீா்த்தவாரி உற்சவம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விழாவில், ஐப்பசி மாதம் 30 நாள்களும் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் இங்கு வந்து புனித நீராடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஆனால், சமீப காலமாக காவிரியில் போதிய நீா்வரத்து இல்லாததால் இங்கு வரும் பக்தா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் தலைமையில், காவிரி துலா உற்சவத்துக்கு என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் சமூக ஆா்வலா்களைக் கொண்ட நிரந்தர குழுவாக அது அமைக்கப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் புரட்டாசி முதல் நாளிலேயே இக்குழுவின் கூட்டத்தை நடத்தி, காவிரி கடைமடைக்கு தேவையான நீரின் அளவைக் கணக்கிட்டு, கடைசி 10 நாள்களாவது தடையின்றி சீரான நீா்வரத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், திருவிசநல்லூா், திருவாலங்காடு, மூவலூா் தடுப்பணை நீராடுதுறைகளில் தண்ணீரைச் சேமித்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பமேளா, மகாமகம் போல மயிலாடுதுறை காவிரி கடைமுகத் தீா்த்தவாரியையும் அரசு விழாவாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.

நிகழாண்டு கடைமுகத் தீா்த்தவாரி உற்சவத்தில் பக்தா்கள் புனிதநீராட ஏதுவாக கல்லணையில் இருந்து வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய்க்கு அனுப்பப்பட்டு வரும் நீரை காவிரியில் திருப்பி விட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், விஎச்பி மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.