பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் சாவு: 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
நாகை மாவட்டம், பூம்புகார் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 3 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், பூம்புகார் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 3 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகள் விவேகா (18). அதே பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் மகள் மஞ்சு (18) மற்றும் கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு வடக்கு சின்னியநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகள் சிவப்பிரியா (17). இவர்கள் நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில், கல்லூரிக்குச் சொந்தமான தங்கும்விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால் விவேகா, மஞ்சு, சிவப்பிரியா ஆகியோர் சக மாணவிகளுடன் சேர்ந்து புதன்கிழமை மதியம் பூம்புகார் கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது மாணவிகள் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத் துறைக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி விவேகா, மஞ்சு, சிவப்பிரியா ஆகிய மூவரும் கடலில் முழ்கினர். பின்னர், சிறிது நேரத்தில் அதே பகுதியில் இறந்த நிலையில் 3 பேரும் சடலமாக கரை ஒதுங்கினர்.
சக மாணவிகளான அசினாபானு, சங்கீதா ஆகிய இருவரும் சிறுகாயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவிகள் வினிதா, அன்னலெட்சுமி காயமின்றி தப்பினர்.
தகவலறிந்த பூம்புகார் காவல் ஆய்வாளர் வேலுதேவி, நாகை கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று மாணவிகளின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மாணவிகள் இறந்த நிகழ்வு பூம்புகார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரை பகுதியில் ஆங்காங்கே கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் காவல்துறை மற்றும் சுற்றலாத் துறை மூலம் வைத்தும், அதைப் பொருள்படுத்தாமல் இதேபோல் கடலில் இறங்கி குளித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.