FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அத்தியாவசியத் தேவைக்காக அதிகரிக்கும் போராட்டங்கள்: போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி

கஜா புயல் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக, அத்தியாவசியத்

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:


கஜா புயல் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக, அத்தியாவசியத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வலியுறுத்தி, மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஒரு சில மறியல் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, போலீஸார் தடியடி நடத்தினர்.
நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்த கஜா புயல் சீற்றம் நாகை மாவட்டத்தின் தென்புறப் பகுதிகளைப் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது. இதில், நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
தொலைத் தொடர்பு, போக்குவரத்து, குடிநீர் விநியோகம், மின் விநியோகம் என அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தடைப்பட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே அகதிகளாக வாழும் நிலை 3 நாள்களாக நீடித்து வருகிறது. மின்வாரியம் மூலம் கடந்த 3 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளில், மாவட்டத்தின் தலைநகரான நாகையின் சுற்றுப் பகுதிகளில் கூட முழுமையாக மின் விநியோகம் சீரமைக்கப்பட முடியாத நிலையே உள்ளது.
இதனிடையே, புயல் சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் மிகப் பெரிய சேதங்கள் ஏதும் இல்லை என்பதைப் போல அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்துத் தெரிவித்ததாக பரவிய தகவல்கள், மக்களை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டுச் சென்றுள்ளது. தடைப்பட்டுள்ள அத்தியாவசியத் தேவைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், பாதிப்புகளை மறைத்துக் கருத்துத் தெரிவித்ததாக அமைச்சர் ஓ.எஸ். மணியனைக் கண்டித்தும், சீரமைப்புப் பணிகளை அரசுத் துறை அலுவலர்கள் துரிதப்படுத்தாததைக் கண்டித்தும் நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக ஆங்காங்கே மறியல்கள் நடைபெற்று வருகின்றன. நாகை மாவட்டம், விழுந்தமாவடி, கன்னித்தோப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சுவார்த்தை நடத்திய போது, அங்கு சிலர் திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் வாகனத்துக்குப் பின்னால் அணிவகுத்து வந்த ஒரு காரை சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
காமேஸ்வரம் பகுதியில் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களைக் கலைந்து செல்ல போலீஸார் வலியுறுத்திய போது, அங்கும் லேசான வன்முறை வெடித்துள்ளது. போலீஸாரை நோக்கி சிலர் கல் வீசியுள்ளனர். இதையடுத்து, போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதே போல, மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளிலும் மக்களின் மறியல் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments