சீர்காழி: 35 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு
சீர்காழி நகரில் 35 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என, விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சீர்காழி நகரில் 35 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என, விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாக் குழுத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்: சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை செப்.12,13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்கள் கொண்டாடுவது.
செப். 12-ஆம் தேதி சீர்காழி நகரப் பகுதியில் 35 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடு நடத்துவது. பின்னர், 14-ஆம் தேதி அனைத்து விநாயகர் சிலைகளையும் பழைய பேருந்து நிலையத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்குப் பின், ஊர்வலமாக கொண்டுசென்று, தென்பாதி உப்பனாற்றில் விசர்ஜனம் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் நடத்துவது என்றும், நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படாத வண்ணம் களிமண், காகிதக்கூழ், கிழங்குமாவு கொண்டு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே ஊர்வலத்தில் எடுத்து வருவது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விழாக் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், இந்து முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், மும்மூர்த்தி, பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாக் குழு பொருளாளர் வீரபாலு நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.