FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வறண்ட வயல்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

கடைமடை பகுதிகளுக்கான ஆற்றுப் பாசனத்தை உறுதி செய்யாத பொதுப் பணித் துறையைக் கண்டித்து நாகையை அடுத்த பாலையூரில், வறண்ட

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கடைமடை பகுதிகளுக்கான ஆற்றுப் பாசனத்தை உறுதி செய்யாத பொதுப் பணித் துறையைக் கண்டித்து நாகையை அடுத்த பாலையூரில், வறண்ட வயல்களில் கருப்புக் கொடிகளைக் கட்டி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, நிகழாண்டில் மேட்டூர் அணை இருமுறை முழு கொள்ளளவை எட்டியது. இதன்காரணமாக, கடைமடை பகுதிகளின் ஆற்றுப் பாசனம் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையில்,  நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கினர். காவிரி மற்றும் வெண்ணாற்றில் முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டும், கடைமடை பகுதிகளின் பல வாய்க்கால்களை தண்ணீர் எட்டவில்லை. இதுதொடர்பாக, ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், கடைமடை பகுதிகளின் வேளாண் பணிகளுக்கான ஆற்றுப் பாசனம் எந்தப் பகுதியிலும் உறுதி செய்யப்படவில்லை.
நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத, நாகை வெண்ணாறு வடிநிலக் கோட்டப் பகுதிகளில், ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி சம்பா நெல் விதைப்புப் பணியைத் தொடங்கிய விவசாயிகள் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, செய்வதறியா நிலைக்கு உள்ளாகியுள்ளனர். 
வாய்க்கால்களை எட்டாத ஆற்றுப் பாசனம், நீடித்து வரும் கடும் வெயில் வானிலை உள்ளிட்டவைகளால், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தின் பல பகுதிகளில் விளைநிலங்கள் வறண்டு போயுள்ளன. சில இடங்களில் நெல் பயிர்கள் நிலத்திலேயே கருகத் தொடங்கியுள்ளன. 
இதன்காரணமாக, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வேளாண் பணிகளுக்குத் தண்ணீர் கோரி மீண்டும் ஆங்காங்கே விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாகையை அடுத்த பாலையூரில் வறண்டு போயுள்ள விளைநிலங்களில், விவசாயிகள் கருப்புக் கொடிகளை கட்டியும், கருப்புக் கொடிகளைக் கையில் ஏந்தி பொதுப் பணித் துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள பாலையூர், செல்லூர், பெருங்கடம்பனூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீரின்றி காயும் நெல் பயிர்களைக் காப்பாற்ற தேவநதி மற்றும் வெட்டாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments