கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: மு.க. ஸ்டாலின்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க திமுக ஆட்சியில் பரிசீலினை மேற்கொள்ளப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க திமுக ஆட்சியில் பரிசீலினை மேற்கொள்ளப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் (வடக்கு) மாவட்டங்களுக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசியது: 2017-18-ஆம் ஆண்டில் பிளஸ் 2 நிறைவு செய்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என்ற புகார் தமிழகம் முழுவதும் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.
மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடன் கோரினால், செக்யூரிட்டி (சொத்து அடமானம்) கேட்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். அமையவுள்ள திமுக ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் வங்கிக் கடனுக்கு திமுக அரசே செக்யூரிட்டியாக இருக்கும். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவுத் திட்டமாக அறிவித்து எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் நிறுத்தப்படும் என பலரும் தெரிவித்தனர்.
ஆனால், திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டது. காரணம், மக்கள் நலனுக்காக ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தால், அதில் அரசியல் பார்க்கும் பழக்கம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்குக் கிடையாது. ஆனால், திமுக ஆட்சியில் பணி நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அதிமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்கள் பணியிலிருந்து விலக்கப்படுகின்றனர்.
திமுக ஆட்சி அமையும்போது மக்கள் நலப் பணியாளர்களின் பிரச்னைகளுக்கு விமோசனம் கிடைக்கும். பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பூம்புகார் மட்டுமல்ல, குமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கும் கூட அதே நிலைதான் உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். திமுக ஆட்சியில் பூம்புகார் சிறப்பான சுற்றுலாத் தலமாக நிச்சயம் வளர்த்தெடுக்கப்படும்.
கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்றார் ஸ்டாலின்.