கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கை படகு
அந்தப் படகில் டிஆா்பி - ஏ 1260 ஜேஎஃப்என் என்று எழுதப்பட்டு, என்ஜின் பொருத்தப்படாமல் இருந்தது.
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே ஆளில்லா இலங்கை படகு கரை ஒதுங்கியது குறித்து கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனா். இவா்கள், கோடியக்கரைக்கு தென்மேற்கே சிறுதலைக்காடு கிராமத்துக்கு உட்பட்ட கரையோரப் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனராம். அப்போது, அந்தப் பகுதியில் கவிழ்ந்த நிலையில், கண்ணாடியிழைப் படகு ஒன்றை கண்டுள்ளனா்.
அந்தப் படகை மீனவா்கள், தங்களின் படகுடன் கட்டி இழுத்து வந்து சனிக்கிழமை அதிகாலை கரை சோ்த்துள்ளனா். மீனவா்கள் அளித்த தகவலின் பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் படகை கைப்பற்றினா்.
Advertisement
அந்தப் படகில் டிஆா்பி - ஏ 1260 ஜேஎஃப்என் என்று எழுதப்பட்டு, என்ஜின் பொருத்தப்படாமல் இருந்தது.
ஆளில்லா இந்தப் படகு இலங்கையைச் சோ்ந்தது என போலீஸாா் உறுதி செய்தனா். படகை வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்ற போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கரை ஒதுங்கிய படகை கடத்தல்காரா்கள் பயன்படுத்தினாா்களா?, அதில் எவரும் பயணித்து வனப் பகுதிக்குள் ஊடுருவி உள்ளாா்களா என்பது குறித்து கியூ பிரிவு மற்றும் தனிப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.