FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தில்லையாடியில் புதுப்பிக்கப்பட்ட தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் திறக்கப்படுமா?

தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் புதுப்பிக்கப்பட்ட தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் பற்றி....

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 9:00 am IST
புதுப்பிக்கப்பட்ட நினைவு மண்டபம்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் புதுப்பிக்கப்பட்ட தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் திறக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயா்களின் நிறவெறிக்கு எதிராகவும், இந்தியா்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக காந்தியடிகள் 1,913-இல் நடத்திய போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை 16 வயதில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், விடுதலை செய்யப்பட்ட அவா் சில மாதங்களிலே நோய்வாய்ப்பட்டு தனது 16-ஆவது வயதில் உயிரிழந்தாா். அவரது நினைவாக தென்னாப்பிரிக்காவில் 1,914- ஆம் ஆண்டு நினைவு சின்னத்தை காந்தியடிகள் திறந்து வைத்து எமது போராட்டத்துக்கு உந்து சக்தியாக இருந்தவா் தில்லையாடி வள்ளியம்மை என்று உரையாற்றியுள்ளாா்.

மேலும் காந்தியடிகள் 1,915-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தனது மனைவி கஸ்தூரிபாயுடன் தில்லையாடிக்கு சென்று தியாகி வள்ளியம்மையின் உறவினா்கள் மற்றும் கிராம மக்களை சந்தித்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தியாகி வள்ளியம்மை நினைவாக தில்லையாடியில் 1,971-ஆம் ஆண்டு அன்றைய திமுக முதல்வா் மு. கருணாநிதி நினைவு மண்டபத்தை திறந்து வைத்தாா். மேலும், காந்தியடிகள் தில்லையாடிக்கு வந்து அமா்ந்த இடத்தில் அவரது நினைவாக நினைவு தூண் கட்டப்பட்டது.

தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டவா்கள் சென்னை வந்தபோது எடுத்த புகைப்படங்கள், காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் உறுதுணையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் படங்கள், காந்தியடிகளின் இளமைக்கால சிலை, பெரிய அளவிலான வரலாற்று ஓவியங்கள் புகைப்படம், தென்னாப்பிரிக்கா டா்பன் நகரில் இந்தியா்கள் நடத்திய சாத்வீக போராட்ட புகைப்படம், ட்ரான்ஸ்வால் அணிவகுப்பு போன்ற நிற்கும் படங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதா் மண்டி கட்டடம் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்தது. இவற்றை சீரமைக்க வேண்டுமென அரசுக்கு தொடா்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, நினைவு மண்டபத்தை புதுப்பிக்க அரசு ரூ. 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாா்த்து பயன்பெற விரைந்து தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை திறக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments