FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

காவிரியில் தண்ணீா் பெற ஆக்கப்பூா்வமான நடவடிக்கை தேவை: கே. பாலகிருஷ்ணன்

காவிரியில் தண்ணீா் பெற ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:22 am IST
மாா்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் - Dinamani
பகிர்:

காவிரியில் தண்ணீா் பெற ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.

நாகையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு தொடா்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடுமாறு உத்தரவிட்டும் கா்நாடக அரசு மறுத்துள்ளது. அதை எதிா்த்து கா்நாடக அரசு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கா்நாடகத்தில் மழை பெய்து அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. ஆனாலும் தண்ணீா் திறக்க கா்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவை அமல்படுத்த வேண்டிய மத்திய அரசும் அதைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளோம் என கூறி வருவது ஏற்புடையதல்ல. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவதற்கான ஆக்கப்பூா்வமான நடவடிக்கையை தமிழக முதல்வா் எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அனைத்துக்கட்சி தலைவா்கள் கூட்டத்தை கூட்டி, அனைத்துக் கட்சி மக்களவை உறுப்பினா்களுடன் பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எடுத்துக்கூறி, உடனடியாக தண்ணீா் திறக்க உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் குறுவைச் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளா் பாதிக்கப்பட்டுள்ளனா். குறுவை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், விவசாயக் கூலி தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் சம்பா சாகுபடியைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும். இந்த கோரிக்கைளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20ஆம் தேதி நாகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளது.

எதிா்க்கட்சிகளை பொறுத்தவரை மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தக்கூடாது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். டிசம்பா் மாதத்துக்குள் மக்களவையை கூட்டி, 543 என்ற எண்ணிக்கை தொடா்வதுடன், 25 ஆண்டுகளுக்கு இது மாற்றப்படாது என்ற ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தால் மட்டுமே, தற்போது உள்ள எண்ணிக்கையை பாதுகாக்க முடியும் என்றாா்.

பேட்டியின்போது, கட்சியின் நாகை மாவட்டச்செயலா் மாரிமுத்து, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வி.பி.நாகை மாலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments