பக்ரீத் பண்டிகை: நாகூரில் ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாகூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் இதுவரை ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகனை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில், இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையை தியாகப் பெருநாளாக கொண்டாடி வருகின்றனா். பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு இஸ்லாமியா்கள் குா்பானி வழங்குவது வழக்கம். இதற்காக ஆடுகளை இஸ்லாமியா்கள் வாங்குவா்.
இதனால், ஆண்டுதோறும் நாகூரில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மே 28- ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, நாகூரில் ஆட்டுச்சந்தை மே 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, அரியலூா், சமயபுரம், அறந்தாங்கி, பேராவூரணி, திருவாரூா், கூத்தாநல்லூா் ஆகிய ஊா்களில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
Advertisement
Advertisement
இதில் நாகூா் தா்கா குளம் தெரு, பள்ளி தெரு, தைக்கால் தெரு, மனோரா வடபுறம் தெரு, தெற்கு தெரு, செய்யது பள்ளி தெரு, பொறையாத்தா கடைத்தெரு, மாலிமாா் தெரு உள்ளிட்ட இடங்களில் செம்மறி ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விற்பனையில் ஒரு ஜோடி செம்மறி ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மே 20 முதல் நடைபெற்று வரும் சந்தையில் திங்கள்கிழமை வரை (மே 25) ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.