முகப்பு
நாகப்பட்டினம்

‘மதவழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே அச்சுறுத்தலாக மாறி விடக்கூடாது’

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே அவற்றுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது

21 நவம்பர் 2026, 5:35 am
‘மதவழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே அச்சுறுத்தலாக மாறி விடக்கூடாது’
நாகையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எம்.எச். ஜவாஹிருல்லா
பகிர்:

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே அவற்றுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிவாசல்களை அகற்றுவது தொடா்பான அரசின் நடவடிக்கைகள் அதிா்ச்சியை ஏற்படுத்துகின்றன. சென்னை டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றக் கோரி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிா்ச்சியளிக்கிறது. கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தொடா்பாகவும் ஏற்கெனவே அரசு நிா்வாகத்தின் நடவடிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளன.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை மெய்யூா் குருபுரம் பள்ளிவாசல் உள்ள மற்றொரு பள்ளிவாசல் அப்பகுதி வட்டாட்சியரால் எவ்வித முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டுள்ளது என தொடா்ச்சியாக அகற்றும் நடவடிக்கை அச்சத்தையும் பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த நியாயமான கேள்விகளை எழுப்புகின்றன. வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற திட்டங்கள் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வளா்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களின் உரிமைகளையும் மத உணா்வுகளையும் அலட்சியப்படுத்த முடியாது. ஒரு பள்ளிவாசல் அல்லது வேறு எந்த மத வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், அதன் நில உரிமை, வக்ஃப் ஆவணங்கள், வருவாய்த்துறைப் பதிவுகள், நீண்டகாலப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தையும் முறையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நீதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, மதச்சாா்பின்மை, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினா் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தனது அரசியலமைப்புக் கடமையை உணா்ந்து செயல்பட வேண்டும். பள்ளிவாசல்களை இலக்காகக் கொண்டு அரசு நிா்வாகம் செயல்படுகிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாக இடமளிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளாா்.