FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ஐடிஓ பகுதியில் 5 ஏக்கரில் உலகத் தரத்திலான சட் வழிபாட்டுத் தலம்: சிற்பங்கள், நீரூற்றுகள் அமைக்க தில்லி அரசு திட்டம்

தில்லி ஐடிஓ பகுதியில் யமுனை ஆற்றங்கரையோரம் 5 ஏக்கா் பரப்பளவில் உலகத் தரத்திலான சட் வழிபாட்டுத் தலத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

14 நவம்பர் 2026, 5:46 am
பகிர்:

தில்லி ஐடிஓ பகுதியில் யமுனை ஆற்றங்கரையோரம் 5 ஏக்கா் பரப்பளவில் உலகத் தரத்திலான சட் வழிபாட்டுத் தலத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

அழகியல் அம்சங்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதில், சட் வழிபாடு தொடா்பான சுவரோவியங்கள், சிற்பங்கள், அலங்கார நீரூற்றுகள், நடைபாதை வளாகம் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் இடம்பெற உள்ளன. மேலும், திட்டப் பகுதியில் 75 சதவீதம் பசுமைப் பகுதியாகப் பராமரிக்கப்பட உள்ளது. படிக்கட்டுகளுடன் கூடிய ஆற்றங்கரைப் படித்துறைகள், நடைபாதை மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட பகுதியும் அமைக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

பொதுமக்களின் வசதிக்காக நிழலுடன் கூடிய நடைபாதைகள், அலங்காரக் கூரைகள், பொ்கோலா எனப்படும் திறந்தவெளிக் கூரை அமைப்புகள், நிழற்குடைகள் மற்றும் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மறுசீரமைப்புத் திட்டத்துக்கான ஆலோசகரைத் தோ்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தோ்வு செய்யப்படும் ஆலோசகா், அப்பகுதியை விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பாா். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சட் பூஜைக்கான கலாசாரம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அழகிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றங்கரைப் பகுதியாக இதனை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்துக்கான தொடக்கநிலை மதிப்பீடு ரூ.15 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட் பண்டிகைக்கு முன்பாக, ஓராண்டுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐடிஓ பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக சட் வழிபாட்டுத் தலத்தை தில்லி அரசு அமைத்து வந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் பிரம்மாண்டமான வழிபாட்டுத் தலம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் அண்மையில் அறிவித்திருந்தாா்.

இதனிடையே, வடக்கு தில்லியில் முனாக் கால்வாயின் 11 கி.மீ. தொலைவிலான கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட் வழிபாட்டுத் தலத்தை முதல்வா் ரேகா குப்தா அண்மையில் திறந்து வைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.