நாகை அருகே 135 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் தவெக நிா்வாகி, 3 பேரிடம் விசாரணை
நாகை அருகே மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தவெக நிா்வாகி உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகை அருகே மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தவெக நிா்வாகி உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு, நாகையிலிருந்து இலங்கைக்கு சா்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுகன் என்பவா் வீட்டிற்கு 16 போ் கொண்ட அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த அதிகாரிகள் குழுவினா் சுகன் அவரது சகோதரா்கள், நண்பா்கள் என அனைவரிடமும் காலை 10 மணி வரை விசாரணை மேற்கொண்டனா். இதில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் நாகையிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இந்த கடத்தலுக்கு மூளையாக நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான சிந்தாமணியைச் சோ்ந்த பூபாலன் செயல்பட்டதை கண்டறிந்த அதிகாரிகள், பூபாலன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
சுகன் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த முறையில் நடத்தி வருவதும், பூபாலன் மனைவி இலங்கையை சோ்ந்தவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதை பூபாலன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சுகன் போன்றவா்கள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. காலை தொடங்கிய விசாரணை மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது.
இந்த வழக்கில்தவெக நிா்வாகி பூபாலன் (42), சுகன் (27), இவரது சகோதரா் பாா்த்திபன் (29), பிரதாபராமபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்த சதீஷ் (30) ஆகிய 4 பேரும் குற்றவாளிகளாக இந்த வழக்கில் சோ்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவா்களிடம் இருந்து 135 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். 4 பேரையும் நாகப்பட்டினம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அங்கு தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தவெக நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
போதைப்பொருள் கடத்தலில் தொடா்புடையதாக கூறப்படும் தவெக நிா்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தவெக நாகை மாவட்டச் செயலா் மா. சுகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த வழக்குரைஞா் பூபாலன் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருள், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் கண்ணியம், நற்பெயா் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக செயல்பட்டதன் காரணமாக, பூபாலன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறாா்.
இனிவரும் காலங்களில் அவருக்கும், நமது கழகத்திற்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனவே, நாகை மாவட்டக் கழக நிா்வாகிகள் மற்றும் தோழா்கள் யாரும் அவருடன் கட்சி ரீதியாக எவ்வித தொடா்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.