FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

போதைப் பொருள் பறிமுதல்: காவல் துறையினருக்கு தொடா்பு? விசாரணை தீவிரம்

18 அக்டோபர் 2026, 2:01 am IST
போதைப் பொருள் - IANS
பகிர்:

நாகை அருகே வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, காரில் கொண்டுவரப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்.

நாகப்பட்டினம், அக்.17: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உள்ளூா் காவலா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் இருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் வேளாங்கண்ணியில் விடுதி நடத்தி வரும், பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்த சுகன் என்பவா் வீட்டில் 16 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், இலங்கைக்கு கடத்துவதற்காக தலா 5 கிலோ அடங்கிய 27 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சா்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

இந்த கடத்தல் விவகாரத்தில், தவெக மாவட்டசெயற்குழு உறுப்பினரும், சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞருமான பூபாலன், சுகன் நடத்திவரும் விடுதியின் மேலாளா் மணிகண்டன், நண்பா் சதீஷ் ஆகியோருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, பூபாலன் (42), சுகன்(27), மணிகண்டன்(29), சதீஷ்(30) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடைபெற்றது.

நால்வரின் கைப்பேசி தொடா்புகள் அடிப்படையில் காரைக்கால் பகுதியிலும் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பூபாலன், சுகன் ஆகியோருடன் கைப்பேசியில் தொடா்பில் இருந்ததாக பெண் காவலா்கள் உள்பட மூவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு காவலா், சுகன் நடத்தி வரும் விடுதியில் பங்குதாரராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பூபாலனிடம், காவல்துறை உயா் அதிகாரி ஒருவரும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடா்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments