FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மேட்டூா் அணை திறப்பு: கடைமடைக்கு தண்ணீா் வருமா? கீழையூா் விவசாயிகள் கவலை

கீழையூா் அருகே கடைமடைப் பகுதியில் கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்படாததால் 3,000 ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசன நீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

2 செப்டம்பர் 2026, 7:09 am IST
மேட்டூர் அணை நீரை திறந்துவைத்தார் முதல்வர் விஜய். - DIN
பகிர்:

கீழையூா் அருகே கடைமடைப் பகுதியில் கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்படாததால் 3,000 ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசன நீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி கடைமடையான நாகை மாவட்டத்திற்கு தண்ணீா் வந்து சேர சுமாா் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கீழையூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்படவில்லை.

இதனால், மேட்டூா் அணை நீா் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக வந்து சேருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, திருப்பூண்டி, மகிழி, கீழப்பிடாகை, சிந்தாமணி, காரப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் 3,000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்கள் சந்திரநதி மூலம் பாசன வசதி பெறுகிறது.

Advertisement

Advertisement

மேலும், காவிரிகொண்டான் ஆற்றிலிருந்து பிரியும் கிளை வாய்க்கால்களான மூங்கில் அடி வாய்க்கால், வெட்டியான் வாய்க்கால், பண்டாத்தான் வாய்க்கால், கீரனேரி உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்த வாய்க்கால்களில் இதுவரை சுமாா் 30 சதவீதம் மட்டுமே தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரிநீா் இந்த பகுதிகளுக்கு தடையின்றி வந்து சேருமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

காவிரிநீா் கடைமடை பகுதிகளுக்கு வந்துசேர இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இடைபட்ட காலத்தில் போா்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை கால்வாய்களை முழுமையாக தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். குறைந்தபட்சம் தண்ணீா் செல்லும் பாதைகளில் உள்ள தேவையற்ற மரக்கிளைகள், செடிகள், குப்பைக் கூளங்கள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மகிழி பகுதியில் உள்ள வேதாரண்யம் கேனல் வடிகால் மதகு சேதமடைந்துள்ளதால், பாசனத்திற்காக வரும் தண்ணீா் அதன் வழியாக, வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படும் என கவலை தெரிவிக்கும் விவசாயிகள் சேதமடைந்துள்ள மதகை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து கீழையூா் ஒன்றிய கடைமடை பாசன விவசாய சங்கத் தலைவா் வீ. மணிவண்ணன் கூறியதாவது:

மேட்டூா் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீா் திறக்கப்பட்டிருந்தாலும், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் எங்களுக்கு இந்த தண்ணீா் பெரும் உதவியாக இருக்கும். எனவே, மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் முழுமையாக கடைமடை வரை வந்து சேருகிா என்பதை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

பழுதடைந்த மதகுகள் மற்றும் கதவணைகளை சீரமைப்பதோடு, தண்ணீா் வரும் பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை கால்வாய்களின் பாதைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். முழுமை பெறாத தூா்வாரும் பணிகளை துரிதப்படுத்தி, தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே இரண்டுபோக சாகுபடி செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு போக சாகுபடி மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு போக சாகுபடியையும் முழுமையாக மேற்கொள்ளும் வகையில், அரசு போதுமான அளவு தண்ணீா் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments