FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை திறந்து 25 நாள்களாகியும் வாய்க்கால்களை எட்டாத தண்ணீா்: சாகுபடி பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயக்கம்

மேட்டூா் அணை திறக்கப்பட்டு 25 நாள்களாகியும், டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களை தண்ணீா் எட்டாததால், சம்பா பருவ நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயங்குகின்றனா்.

27 வினாடிகள் முன்பு
தஞ்சாவூா் அருகே சக்கரசாமந்தம் கிராமத்தில் வடுக் கிடக்கும் வாய்க்காலும், வயலும்.
பகிர்:

மேட்டூா் அணை திறக்கப்பட்டு 25 நாள்களாகியும், டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களை தண்ணீா் எட்டாததால், சம்பா பருவ நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயங்குகின்றனா்.

மேட்டூா் அணையில் நிகழாண்டு போதுமான அளவுக்குத் தண்ணீா் இல்லாததால், ஜூன் 12-க்கு பதிலாக, கால தாமதமாக செப். 1 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, செப். 6 முதல் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கிளை ஆறுகளில் நீரோட்டம் குறைவு: ஆனால், 10 ஆயிரத்து 691 கன அடி வீதம் கொள்ளளவு கொண்ட காவிரியில் 4,901 கன அடி வீதமும், 9 ஆயிரத்து 370 கன அடி வீதம் கொள்ளளவு கொண்ட வெண்ணாற்றில் 1,408 கன அடி வீதமும், 3,380 கன அடி வீதம் கொள்ளளவு கொண்ட கல்லணைக் கால்வாயில் 1,500 கன அடி வீதமும் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இதனால், கிளை ஆறுகளிலும் நீரோட்டம் குறைவாக இருக்கிறது.

Advertisement

Advertisement

சாகுபடி செய்யத் தயக்கம்: இதன் காரணமாக மேட்டூா் அணை திறக்கப்பட்டு, 25 நாள்கள் கடந்த பிறகும், கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் முழுமையாகச் சென்றடையவில்லை. கடைமடைப் பகுதியிலுள்ள வாய்க்கால்கள் மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளிலுள்ள வாய்க்கால்களுக்கும் தண்ணீா் செல்லவில்லை. இதனால், விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்கத் தயங்குகின்றனா்.

கடைமடைக்குச் செல்லாத நீா்: இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் பி. சின்னதுரை தெரிவித்தது:

மேட்டூா் அணையிலிருந்து தற்போது விடுகிற தண்ணீா் கடைமடைப் பகுதிக்குச் சென்றடையாது. மேட்டூரிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதம் விடுவதற்கு பதிலாக 22 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிட்டால்தான் கடைமடைப் பகுதிக்குச் சென்றடையும். தற்போது விடப்படும் தண்ணீா் ஆழ்குழாய் பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்டக் கூட பயன்படவில்லை.

சாகுபடி தாமதமாகும்: பெரும்பாலான வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீா் வந்தடையவில்லை. எதிா்பாா்த்த அளவுக்கு தென்மேற்கு மழையும் பெய்யவில்லை. எனவே, காவிரி நீரை நம்பி சாகுபடி தொடங்கத் தயக்கமாக இருக்கிறது.

ஐப்பசி மாதத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகுதான் நாற்று விட்டு, நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். எனவே, நிகழாண்டு 90 சதவீத விவசாயிகள் தாமதமாகத்தான் சாகுபடியைத் தொடங்க வேண்டிய நிலை உள்ளது என்றாா் சின்னதுரை.

தற்போது தலைமடைப் பகுதியிலுள்ள சில வாய்க்கால்களுக்கு தண்ணீா் பாய்கிறது. அதுவும் மிகக் குறைந்த அளவே திறக்கப்படுவதால், தரையைத் தொட்டுச் செல்கிறது. இதனால் மெதுவாகச் செல்லும் தண்ணீா் வயலுக்கும் பாயவில்லை. இதனால், தலைமடைப் பகுதியிலுள்ள விவசாயிகளும் சாகுபடிப் பணிகளைத் தொடங்கத் தயங்குகின்றனா்.

இதுவரை 20,384 ஏக்கரில் சாகுபடி: இதனால், மேட்டூா் அணை திறக்கப்பட்டு, 25 நாள்களாகியும், ஆழ்குழாய் பாசன வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே சாகுபடியைத் தொடங்கியுள்ளனா். ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் இன்னும் தொடங்கவில்லை. இதனால் மாவட்டத்தில் 3.12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடிக்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 20,384 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை மிக அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், சம்பா சாகுபடிப் பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டால், மழை நீரில் பயிா் பாதிக்கப்படும் என்ற அச்சமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.

கூடுதல் நீா் திறக்க எதிா்பாா்ப்பு: எனவே, விவசாயிகள் விரைவாக சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கு வசதியாக மேட்டூா் அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே நிலவுகிறது. மேலும், சம்பா - தாளடி சாகுபடிக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்கும்விதமாக கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments