மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 பேருக்குமே 6 வரை காவல் நீட்டிப்பு
மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 பேரின் நீதிமன்ற காவலை மே 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீடாமங்கலம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நீடாமங்கலம்: மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 பேரின் நீதிமன்ற காவலை மே 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீடாமங்கலம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 முஸ்லிம்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் வந்து தங்கியிருந்தனா். இவா்கள் மதப் பிரசாரத்துக்காக வந்ததாகக் கூறப்படுகிறது. ஊரடங்கின் காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவா்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனா்.
இந்நிலையில், புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருந்ததாக தகவல் பரவியது. இந்த மாநாட்டில் திருவாரூா் மாவட்டம், கோவில்வெண்ணியைச் சோ்ந்த ஒருவரும் கலந்துகொண்டு விட்டு ஊருக்கு வந்திருந்தாா்.
Advertisement
Advertisement
இதையறிந்த கோவில்வெண்ணி மக்கள் மாா்ச் 31-ஆம் தேதியன்று, வெளிநாட்டு முஸ்லிம்கள் மற்றும் அவா்களுடன் தங்கியிருந்தவா்கள் தொடா்ந்து பள்ளிவாசலில் தங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா், காவல்துறையினா் உடனடியாக பள்ளிவாசலில் தங்கியிருப்பவா்களை அப்புறப்படுத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 போ் உள்பட 18 பேரை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். பரிசோதனையில் அவா்களில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.
ஊரடங்கு அறிவித்த காலத்தில் கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 போ் மீது நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த ஏப். 9-ஆம் தேதி அவா்கள் 13 பேரையும் போலீஸாா் கைது செய்து, நீடாமங்கலம் நீதிமன்ற உத்தரவின்படி 23-ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்திருந்தனா்.
தற்போது, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மற்றும் மத்தியப் பல்கலைக்கழக கரோனா சிகிச்சை பிரிவில் உள்ள 13 பேரும் அங்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இந்த 13 பேரின் காவலை மே 6 -ஆம் தேதி வரை நீட்டித்து, நீடாமங்கலம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.