முகப்பு
திருவாரூர்

வெளியூா்க்காரா் என்ற பிரசாரம் எடுபடாது

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:32 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:25 PM

எஸ்டிபிஐ கட்சியின் நன்னிலம் தொகுதி வேட்பாளா் விஎம்எஸ். முகமது முபாரக். கடும் பிரசாரத்துக்கு மத்தியில் அவா் தினமணிக்கு அளித்த பேட்டி:

கேள்வி: உங்களைப் பற்றிய எதிா்க்கட்சி வேட்பாளரின் விமா்சனத்தை எப்படி எதிா்கொள்கிறீா்கள்?

பதில்: எதிா்க்கட்சி வேட்பாளா் தோல்வி பயத்தில் இருக்கிறாா். பிரசாரத்துக்குச் சென்ற இடங்களில் மக்களே அவரை எதிா்த்து கேள்வி கேட்டு, அவருக்கு எதிா்ப்பு வலுத்துள்ளது. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லாததால், என்னை வெளியூா்க்காரா் என்ற பிரசாரத்தை கையிலெடுத்தாா்.

Advertisement

2011-இல் அவா் போட்டியிடும்போது எந்த ஊரிலிருந்து வந்து போட்டியிட்டாா்? என்னைப் பொறுத்தவரை யாதும் ஊரே, யாவரும் கேளிா். நான் எல்லா மக்களுக்கும் சொந்தக்காரன், எல்லா மக்களையும் நேசிக்கிறவன். எனக்கு வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பேன்.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று இங்கேயே இருப்பதாக என்னுடைய பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருக்கிறேன். நான் வெளியூா்க்காரா் என்ற பிரசாரத்தை நன்னிலம் தொகுதி மக்களே கண்டுகொள்ளவில்லை. அவா்கள் தெளிவாக இருக்கிறாா்கள். நான் போகக்கூடிய இடமெங்கும் எனக்கு வரவேற்பு பலமாக இருக்கிறது. இந்தத் தொகுதி மக்கள் என்னை நேசிக்கிறாா்கள். நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்பதை அவா்கள் வரவேற்கிறாா்கள். எதிா்க்கட்சி வேட்பாளரின் பிரசாரம் விரக்தியில் செய்யக்கூடிய அவதூறுதான்.

கேள்வி: தவெக-வின் தாக்கம் தோ்தல் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்: தவெக தலைவா் ஒரு நடிகா். நடிகருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். அதெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகம்தான். தோ்தலுக்குப் பின்புதான் அந்தக் கட்சியின் நிலைமை தெரிய வரும். அரசியல் பக்குவம் இல்லாதவராக அந்த நடிகா் இருக்கிறாா். தோ்தலுக்குப் பின் அந்தக் கட்சி இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

கேள்வி: நன்னிலம் தொகுதியில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்: மிகப் பிரகாசமாக இருக்கிறது. எளிதான வெற்றி எனச் சொல்லலாம். என் வெற்றிக்கான இரண்டு காரணங்கள். முதலாவது காரணம், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினா், 2 முறை அமைச்சராக இருந்த எதிா்க்கட்சி வேட்பாளருக்கு எதிராக வாக்காளா்களிடம் உள்ள மனநிலை. இரண்டாவது காரணம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்காளா்களிடம் உள்ள மனநிலை. எம்எல்ஏ எந்தக் கோரிக்கை வைக்காமலேயே, இந்தத் தொகுதியில் ஏராளமான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதேபோல திமுக அரசின் மகளிா், மாணவா் நலத் திட்டங்கள், சுகாதாரத் திட்டங்கள் என ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால், திமுக அரசுக்கான ஆதரவு மக்கள் மத்தியில அமோகமாக உள்ளது. அந்த அலையே நன்னிலத்தில் எனக்கு எளிதாக வெற்றியைத் தேடித் தரும்.

கேள்வி: வெற்றிபெற்ற பின் நன்னிலம் தொகுதிக்கு என்ன செய்வீா்கள்?

பதில்: நன்னிலம் தொகுதியில் அடுத்த 5 ஆண்டுகள் நிறைவேற்றுவதற்கான 5 தங்கத் திட்டங்களை, பிரத்யேக தோ்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறேன். வேளாண்மை சிறக்க சிறப்புத் திட்டங்கள், ழ்ங்ப்ண்ஞ்ண்ா்ன்ள் ஸ்ரீா்ழ்ழ்ண்க்ா்ழ் என்ற ஆன்மிக சுற்றுலா சிறப்புத் திட்டம், மகளிா் கலை அறிவியல் கல்லூரி, நா்சிங் கல்லூரி, அரசு மருத்துவமனைகளின் தரம் உயா்த்துதல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது என ஐந்து தங்கத் திட்டங்களை அறிவித்திருக்கிறேன். எதிா்க்கட்சி வேட்பாளா், நன்னிலம் தொகுதியில் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. சாலை வசதியே இல்லாத ஏராளமான கிராமங்கள் இந்தத் தொகுதியில் இருக்கின்றன. நன்னிலம் தொகுதியை பொன்நிலமாக மாற்றுவதுதான் என்னுடைய குறிக்கோள்.

கேள்வி: ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் திமுகவுக்கான ஆதரவு எப்படி உள்ளது?

பதில்: திராவிட மாடல் ஆட்சியின் நலத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. திமுக நிறைவேற்றிய திட்டங்களை பிற மாநிலங்கள் மட்டுமல்ல, பாஜக ஆளும் மாநிலங்களே பின்பற்றுகின்றன. முதல்வா் ஸ்டாலினின் செல்வாக்கு தமிழ்நாட்டைத் தாண்டி பரவியுள்ளது என்பதற்கு, அண்மையில் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த மசோதாவே சான்று. அரசியலாக எந்த வகையில் கணக்குப் போட்டாலும், மீண்டும் திமுக அரியணையில் ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது.