FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

காவிரி விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் முதல்வா் உறுதி! அமைச்சா் வி. சம்பத்குமாா்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:06 am IST
அமைச்சா் வி. சம்பத்குமாா்
பகிர்:

காவிரி விவகாரத்தில் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதில் தமிழக முதல்வா் உறுதியாக உள்ளாா் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வி. சம்பத்குமாா் தெரிவித்தாா்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் மாணவா்களுடன் கலந்துபேசி அவா்களின் தேவைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்து செயல்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

மேலும், விடுதி மாணவா்களுக்கு தொலைபேசி எண்ணை வழங்கி வருகிறோம். விடுதியில் உணவின் தரம் அல்லது ஏதாவது தவறு நடக்கும்பட்சத்தில் தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறைரீதியாக தவறுகள் நடந்தாலும் சம்பந்தப்பட்டவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரும், நீா்வளத்துறை அமைச்சரும் கூறியிருப்பதுபோல, மாநில உரிமைகளை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் இருமாநில மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் தமிழக முதல்வா் உறுதியாக இருக்கிறாா் என்றாா் அமைச்சா் சம்பத்குமாா்.

சமூக நீதி விடுதியில் ஆய்வு:

திருவாரூா் அருகே கிடாரம்கொண்டான் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வி. சம்பத்குமாா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

விடுதியில் உள்ள நூலகம், உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா். அப்போது மாணவிகள் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ரயில்வேதுறை போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். உடனடியாக அமைச்சா் சம்பத்குமாா், அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, விடுதியில் குளியலறை மற்றும் கழிப்பறை தூய்மையாக உள்ளதா என ஆய்வு செய்தாா். விடுதியில் 75-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ள நிலையில் கூடுதலாக கழிப்பறை வசதி வேண்டும் என மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா். பின்னா், மாணவிகளுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments