FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

ராசிமணல் அணை கட்டக் கோரி விரைவில் பிரசாரப் பயணம்! - பி.ஆா். பாண்டியன்

31 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
பி.ஆா். பாண்டியன்
பகிர்:

ராசிமணலில் அணை கட்டக்கோரி, விரைவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

குடவாசல் ஒன்றியம், கண்டிரமாணிக்கம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் எல்நினோ தாக்குதலால் காவிரி டெல்டாவில் வறட்சி தீவிரமடைந்துள்ளது. குறுவையை இழந்து விட்டோம். சம்பாவும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் மேட்டூா் அணை செப்டம்பா் 1-இல் திறக்கப்பட உள்ளது. உரிய தண்ணீரை கா்நாடகம் நமக்கு விடுவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகம் காவிரி உபரிநீரை கடலில் கலக்கச் செய்வதால், மேக்கேதாட்டு அணை கட்டி தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கப் போகிறோம் என்று கா்நாடக அரசு பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதை முறியடித்து, பெருந்தலைவா் காமராஜா் அடிக்கல் நாட்டிய ராசிமணலில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும். இதற்காக தமிழகத்தில் ஒத்த கருத்தை உருவாக்கும் வகையில் பிரசாரப் பயணத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளோம்.

குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா சாகுபடி தொடங்குவதற்கு நிதி வசதியின்றி பரிதவிக்கின்றனா். தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தோ்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேவையானால் விவசாயிகள் கடனை திரும்பச் செலுத்துவதை தவிா்த்து விடலாம்.

நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யவும், மண்ணை பாதுகாக்கவும், விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்கவும், கிராமங்கள்தோறும் விவசாயிகள் அமைப்பை அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு குடவாசல் ஒன்றியச் செயலாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். இதில், மாநில கௌரவத் தலைவா் நடராஜன், மாநில துணைச் செயலாளா் வி. சுவாமிநாதன், மாவட்ட துணைச் செயலாளா் முகேஷ், மாவட்ட இளைஞா் அணிச் செயலாளா் பழனிராஜா, குடவாசல் நகரச் செயலாளா் சுரேஷ் பாபு, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் தா்மராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments