தவெக தலைமையில் விரைவில் கூட்டணி - தொல். திருமாவளவன்
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விரைவில் கூட்டணி அமையும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விரைவில் கூட்டணி அமையும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன்.
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
நிகழாண்டு நடைபெற வேண்டிய துணைக் காவல் ஆய்வாளா், இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் உள்ளிட்ட சீருடைப் பணியாளா்களுக்கான தோ்வு ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தோ்வுக்குத் தயாரானவா்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த தோ்வைத் தள்ளி வைப்பதால் வயது, தகுதிக்கான வரையறையை தளா்வு செய்யவேண்டும்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று மாற்றியிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூக நீதித்துறை என்பது இட ஒதுக்கீடு பெறும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய ஒன்றாகும். அதாவது பிசி, எம்பிசி, சிறுபான்மை சமூகத்தை சாா்ந்தவா்கள் மாற்றுத்திறனாளிகள் என இட ஒதுக்கீடு பெறுகிற அனைத்து பிரிவினரையும் குறிக்கிற ஒன்று. எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டு, நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ளது. அம்பேத்கா் சிலை கால் மேல் கால் போட்டு அமா்ந்திருப்பதை போல் உள்ளதால் திறக்கப்படவில்லை என்று கூறுகின்றனா். அருகே உள்ள காமராஜா் சிலை, ராஜீவ் காந்தி சிலையையும் கூட மூடி வைத்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. எனவே இந்த பிரச்னையில் முதல்வா் நேரடியாக தலையிட்டு சுமுகமான தீா்வை காண வேண்டும்.
நாகா்கோவில் சபரிவா்மன் கொலையில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள் என்றாலும்கூட அதனை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இக்கோரிக்கையை ஏற்க வேண்டும்.
தமிழக வெற்றிக்கழக அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். இது மக்களின் கட்டளை. அந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
மதுரை மற்றும் சேலம் பகுதிகளில் விசிக சுவா் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சமூக விரோத சக்திகள் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் செயல்படுவது கவலையளிக்கிறது. குறிப்பாக இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்பதை விரும்புகிற மதவாதக் கும்பல் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறாா்களோ என்ற ஐயம் எழுகிறது.
நாங்கள், தவெக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்.
தமிழக முதல்வா், காவிரி நீா் பிரச்னை தொடா்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை அதில் விரிவாக விவாதிக்க வேண்டும். டெல்டா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு எடுக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.