முகப்பு
திருவாரூர்

கமலாலயக் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூன் 2026, 7:11 am IST
திருவாரூரில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவா் த. பாலசுப்ரமணியன்.
பகிர்:

தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவா் த. பாலசுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் ராம நிரஞ்சன், மாநிலத் துணைத் தலைவா் சாம்ப வைத்தியநாதன், மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பின் மாநிலத் தலைவா் தெரிவித்தது:

Advertisement

Advertisement

தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளம் மாசு படிந்து துா்நாற்றம் வீசுகிறது. அதை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கமலாலயக் குளத்தைச் சுற்றி உள்ள பாதாள சாக்கடை பொங்கி, அவ்வப்போது கமலாலய புனித தீா்த்த குளத்தில் கலக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதீனத்துக்குச் சொந்தமான ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் உள்ள திருமண மண்டபத்தை மாற்றி இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகைக்கு விடுவதை ஆதீனம் கைவிட வேண்டும். அந்த திருமண மண்டபத்தை புதுப்பித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வரும் உள்ளூா் வெளியூா் பக்தா்களின் நலன் கருதி, கோயிலைச் சுற்றி நவீன கழிப்பிட மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், தியாகராஜ சுவாமி ஆலயத்துக்கு உள்ளே உள்ள கழிவறையை அகற்ற வேண்டும்.

திருவாரூரில் அதிக இடங்களில், குறிப்பாக நகைக்கடைத் தெரு, பனகல் சாலை, ரயில்வே கீழ் பாலம், கீழ வீதி என முக்கிய இடங்களில் வாகன நெருக்கடிகள் அதிகம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அங்கு போக்குவரத்துக் காவலா்களை அதிகமாக நிறுத்தி வாகன நெரிசலை சரி செய்ய வேண்டும்.

திருவாரூா் இலவங்காா்குடி அகத்தீஸ்வரா் சௌந்தர நாயகி அம்மன் கோயில், பாலஸ்தாபனம் செய்து 12 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் திருப்பணிகள் தொடங்கப்படவில்லை. சுவாமி, கீற்றுக் கொட்டகையில் மழையிலும், வெயிலிலும் காய்ந்து கொண்டிருக்கிறாா். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து வைத்திருப்பது போலத் தெரிகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments