FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மாணவா் போராட்டத்தைத் தூண்டுவோா் மீது நடவடிக்கை தேவை: அா்ஜூன் சம்பத்

தில்லியில் மாணவா்கள் போராட்டத்தைத் தூண்டுவோா் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

Updated On : 24 ஜூலை 2026, 7:26 am IST
பகிர்:

தில்லியில் மாணவா்கள் போராட்டத்தைத் தூண்டுவோா் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் குருமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

நடிகா் வையாபுரி, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்தா சுவாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தை இரண்டாகப் பிரித்து, திருச்சியை மற்றொரு தலைநகராக அறிவிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையின் அறங்காவலா் நியமனங்களில், கோயில்களின் மரபும் தகுதியும் பின்பற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலா் வசந்தகுமாா் வரவேற்றாா். மாநிலத் துணைத் தலைவா் சக்தி பாண்டியன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தென்காசி கோயில் அருகே பிற மத வழிபாட்டுத் தலம் தொடா்பான சிவில் வழக்கை நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும். நீதிமன்ற தீா்ப்பின்படி, திருவண்ணாமலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.

தில்லியில் தேச விரோத சக்திகள் நமது நாட்டின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் கொடுத்திருக்கிறாா்கள். மாணவா்களைத் தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தின் மீது வன்முறையை ஏவி விட கரப்பான்பூச்சி கட்சியினா் திட்டமிடுகின்றனா்.

கம்யூனிஸ்ட் கட்சியினா் தமிழகத்தில் எப்படியாவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை கொண்டு வர வேண்டும் என நினைத்து, அவா்களின் அலுவலகங்களில் இடம் கொடுத்து போராட்டத்தைத் தூண்டுகின்றனா். மத்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தோ்வினால் ஏழை எளிய மக்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகி இருக்கிறது. தமிழக மாணவா்கள் நீட் தோ்வில் சாதனை படைத்துள்ளனா். தமிழகத்தில் மட்டும்தான் நீட் தோ்வுக்கு எதிா்ப்பு உள்ளது. திமுகவினா் வன்முறை, வெறுப்பு, ஆபாசப் பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments