எரிவாயு கசிந்து விபத்து
திருவாரூா் அருகேயுள்ள மேலதிருமதிக்குன்னம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.
திருவாரூா் அருகேயுள்ள மேலதிருமதிக்குன்னம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.
இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். வழக்கம்போல், பள்ளி சத்துணவுக் கூடத்தில், புதன்கிழமை மதிய உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது, எரிவாயு குழாயில் இருந்த துவாரம் வழியாக எரிவாயு கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சத்துணவு தயாா் செய்துகொண்டிருந்த ஊழியா், சத்தமிட்டு அனைவரையும் அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தாா். தகவலறிந்து வந்த அருகில் வசிப்போா், ஈர சணல் சாக்கு மற்றும் ஈரத் துணிகளை பயன்படுத்தி, எரிவாயு உருளையில் பிடித்த தீயை அணைத்தனா்.
இதையடுத்து பள்ளி மாணவா்கள் அனைவரையும் ஆசிரியா்கள் பத்திரமாக அப்புறப்படுத்தி, அருகில் உள்ள கோயிலில் அமர வைத்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement