போலீஸ் மீது நடவடிக்கை கோரும் சோம்நாத் பார்தி மனு மீது செப்டம்பர் 30-இல் விசாரணை
தில்லி சட்ட அமைச்சராக தான் இருந்த போது பெண்கள் குடியிருப்பில் சோதனை நடத்திய விவகாரத்தில் தன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சோம்நாத் பார்தி தாக்கல் செய்த மனு வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
தில்லி சட்ட அமைச்சராக தான் இருந்த போது பெண்கள் குடியிருப்பில் சோதனை நடத்திய விவகாரத்தில் தன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சோம்நாத் பார்தி தாக்கல் செய்த மனு வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரிக்க வேண்டிய கூடுதல் நீதிபதி பூபேஷ் குமார், சனிக்கிழமை விடுப்பு எடுத்தார். இதன் காரணமாக இந்த மனு மீது செப்டம்பர் 30-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் கூறியது.
தில்லி சட்ட அமைச்சராக 2013 டிசம்பர் முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சோம்நாத் பார்தி இருந்தார். அப்போது தெற்கு தில்லி கிர்கி விரிவாக்கப் பகுதியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள் வசிக்கும் குடியிருப்புக்கு நள்ளிரவில் சில அதிகாரிகளுடன் சோம்நாத் பார்தி சென்றார்.
Advertisement
Advertisement
அங்குள்ள குடியிருப்பில் பெண்கள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி வீட்டுக்குள் இருந்த சில பெண்களை வெளியே வரச் செய்து அவர்களிடம் சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை நடத்த சோம்நாத் பார்தி நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சோதனையின் போது சில பெண்களை கைது செய்யும்படி, தன்னுடன் வந்த காவல் துறையினருக்கு சோம்நாத் பார்தி உத்தரவிட்டார்.
எனினும், பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சில நடைமுறைகள் உள்ளதால், அவரது உத்தரவை ஏற்க காவல் துறையினர் மறுத்தனர்.
இதற்கிடையே, இந்த சோதனை தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சோம்நாத் பார்தி மீது தில்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து சோம்நாத் பார்தி சார்பில் தில்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (மாஜிஸ்திரேட் கோர்ட் ) மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அம்மனுவை மாஜிஸ்திரேட் கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு மீதான வாதங்கள் வரும் 30-ஆம் தேதி விசாரணையின் போது முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக வழக்கில் சோம்நாத் பார்திக்கு எதிராக 41 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சோம்நாத் பார்திக்கு எதிராக தில்லி காவல் துறை கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இருந்த போதிலும், அவர் பிப்ரவரி மாதம் வரை சட்ட அமைச்சராக இருந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தில்லி அரசின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் கவிழ்ந்தது. அதன் பிறகு, இரண்டாவது முறையாகக் கடந்த பிப்ரவரியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது.
அதில் சோம்நாத் பார்தி அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை அனுப்பிய கடிதத்தை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிசீலித்தார். இதன் முடிவில், சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை எடுக்க நஜீப் ஜங் அண்மையில் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது ஆணைக்கு எதிராக 29ஆம் தேதி விசாரணை: தனது மனைவி அளித்த குடும்ப வன்முறைப் புகாரின் பேரில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள, ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை ரத்து செய்யக்கோரி சோம்நாத் பார்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணையை துவாரகா நீதிமன்றம் வரும் 29ஆம் தேதி மேற்கொள்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.