FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இரட்டை இலைச் சின்னம் வழக்கு: விசாரணை ஆக. 14-க்கு ஒத்திவைப்பு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:23 am IST
பகிர்:

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், "தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி , "தண்டனை பெற்றுள்ள வி.கே. சசிகலா, இரட்டை இலைச் சின்னம் வேண்டும் என கோருவதா? கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக குறுக்கு வழியில் நியமிக்கப்பட்ட டிடிவி. தினகரனுக்கு எதிராக, சின்னம் பெறுவதற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. தன்னை இந்தியக் குடிமகன் இல்லை எனக் கூறியவர் அவர். டிடிவி தினகரன் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. எங்கள் தரப்புக்கே பெரும்பான்மை உள்ளது. சாதிக் அலி வழக்கின்படி தேர்தல் சின்னம் எங்கள் தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பே உண்மையான கட்சி' என்று கூறி அவர் வாதங்களை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவிருந்தது. அப்போது நீதிபதிகள் வேறு பல வழக்குகளை நீதிபதிகளின் அறையில் விசாரித்துக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சார்பில் கோர்ட் மாஸ்டர் கூறினார்.
அடுத்து வரும் விசாரணையின் போது, 4-ஆவது எதிர் மனுதாரரான செம்மலை சார்பில் வழக்குரைஞர் விஸ்வநாதனும், 2-ஆவது எதிர் மனுதாரரான மதுசூதனன் சார்பில் வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமாரும் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments