FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மல்லையா சொத்துகள் முடக்கத்துக்கு எதிரான உத்தரவு: மேல்முறையீடு செய்ய அமலாக்கத் துறை முடிவு

மல்லையாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இருவேறு சொத்துகளை முடக்கியதை விடுவித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 6:06 am IST
பகிர்:

மல்லையாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இருவேறு சொத்துகளை முடக்கியதை விடுவித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதை  எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அமலாக்கத் துறை தெரிவிதுள்ளது.
சம்பந்தப்பட்ட சொத்துகளின் மதிப்பு குறைவாக இருந்தாலும், அவை மல்லையாவின் கடன் ஏய்ப்பு வழக்குகளுடன் தொடர்புடையவை எனவும் கூறியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை சார்பில் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.
இதற்கு நடுவே, மல்லையாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள "கிங் ஃபிஷர்' நிறுவனத்துக்குச் சொந்தமான இரு சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கியது.
இதுதொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது "யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங் லிமிடெட்' நிறுவனம் தரப்பில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, முடக்கப்பட்ட அந்த சொத்துகளை விடுவிக்குமாறு தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கும், மல்லையாவின் கடன் ஏய்ப்பு வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று "யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங் லிமிடெட்' நிறுவனம் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது.
ஆனால், அந்தச் சொத்துகள் அனைத்தும் முறைப்படி ஆய்வு செய்து, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவற்றின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
"கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் பொறுப்பு நிறுவனமாக "யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங் லிமிடெட்' விளங்குகிறது. எனவே,  மல்லையா "கிங் ஃபிஷர்' உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் பெற்ற கடன்களுக்கும், "யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங் லிமிடெட்' நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால்தான் அவ்விரு சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments