இடதுசாரி ஆர்வலர்கள் கைது நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஐந்து
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஐந்து பேரை அந்த மாநில காவல் துறையினர் கைது செய்த சம்பவத்துக்கு அருந்ததி ராய், பிரஷாந்த் பூஷன், ஜிக்னேஷ் மேவானி, அருணா ராய் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பியுடிஆர்), சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (பியுசிஎல்) ஆகிய அமைப்புகள் தில்லி பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், சமூக ஆர்வலர் அருணா ராய், துப்புரவுத் தொழிலாளர் சங்கத் தலைவர் பெஸ்வாடா வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் அருந்ததி ராய் பேசியதாவது: மோடி அலை நாடு முழுவதும் நீர்த்துப் போயுள்ள நிலையில், மாற்றுக் கருத்துகளை நசுக்கும் முயற்சியில் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களால் மக்கள் மனங்களில் பயம் விதைக்கப்படுகிறது. இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது. மத்திய அரசின் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவளிக்காதவர்கள் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுகின்றனர். இந்தியாவின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போதைய இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தவராக, தலித்தாக இருப்பதெல்லாம் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் லாபங்களுக்காக இந்தக் கைது நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்கிறது. 2019 மக்களவைத் தேர்தல் வரை இந்தக் கைது நடவடிக்கைகள் தொடரும் என்றே கருதுகிறேன் என்றார் அவர்.
வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் கூறுகையில், 'மனித உரிமைகள் மீது சிறிது சிறிதாக தாக்குதல் நடத்தி, இந்திய ஜனநாயகத்தை அழிக்க முற்படுகின்றனர்' என்றார்.
குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், 'மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை திசை திருப்பும் வகையில், இந்தக் கைதுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுவது அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும். தலித் எழுச்சியை சிதைக்கும் வகையிலான மத்தியஅரசின் நடவடிக்கைகள் வெற்றி பெறாது. செப்டம்பர் 5-ஆம் தேதி நாட்டின் பல பாகங்களில் தலித்துகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளனர்' என்றார்.
மேலும், இடதுசாரி ஆர்வலர்கள் கைதுநடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கூட்டு அறிக்கையையும் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், 'பொய்யான காரணங்களைக் கூறி இடதுசாரி ஆர்வலர்களைக் கைது செய்த மகராஷ்டிர காவல் துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.