FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல் முறையாக தில்லி காவல் துறையின் 14 மாவட்டங்களில் 4-இல் பெண் துணைக் காவல் ஆணையர்கள்!

தில்லியில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் முதல் முறையாக 4 மாவட்டங்களில் பெண் துணைக் காவல் ஆணையர்கள்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தில்லியில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் முதல் முறையாக 4 மாவட்டங்களில் பெண் துணைக் காவல் ஆணையர்கள் பொறுப்பில் உள்ளனர். தில்லி காவல் துறையில் புதன்கிழமை காவல் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 4 மாவட்டங்களில் துணைக் காவல் ஆணையர்களாக பெண் அதிகாரிகள் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு தில்லி மாவட்டத்தில் அஸ்லாம் கான், ஷாதராவில் மேக்னா யாதவ், வடக்கு தில்லியில் நுபுர் பிரசாத் ஆகிய பெண் துணைக் காவல் ஆணையர்கள் ஏற்கெனவே பொறுப்பில் உள்ளனர். 
காவல் துறையின் தற்போதைய புதிய அதிகாரிகள் இடமாற்றல் உத்தரவின்படி, தெற்கு தில்லி மாவட்டத்துக்கு புதிய துணைக் காவல் கண்காணிப்பாளராக மோனிகா பரத்வாஜ் பொறுப்பேற்றுள்ளார். இவரையும் சேர்த்தால் தில்லியில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 4 மாவட்டங்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
அஸ்லாம் கான்: வடமேற்கு தில்லி மாவட்ட காவல் துணை ஆணையாரான அஸ்லாம் கான், 2009-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். 
அந்தமானில் காவல் துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய போது, போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சிலில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்துக் காவல் அதிகாரி உள்பட அரசு அதிகாரிகள் என 8 பேரை கைது செய்தார். இவரது கணவர் பங்கஜ் சிங் கிழக்கு தில்லி மாவட்டக் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 
அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கொள்ளையத் தடுக்க முயன்ற டிரக் ஓட்டுநர் கொல்லப்பட்டார். இதனால், பாதிப்புக்குள்ளான அவரது குடும்பத்தினருக்கு அஸ்லாம் கான், தனது சம்பளத்தில் பாதித் தொகையை அளித்துள்ளார். மேலும், அந்த டிரக் ஓட்டுநரின் குழந்தைகளின் படிப்புச் செலவையும் இவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேக்னா யாதவ்: 2007-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரியான மேக்னா யாதவ் முதல் முறையாக தில்லியில் மாவட்டக் காவல் துணை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார். டாமனில் பணியாற்றிய போது, அங்கு பணப் பறிப்பு சம்பவங்களில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்தவர். இவரது கணவர் சிஜு குருவில்லா தில்லி புறநகர்ப் பகுதியில் துணை காவல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். 
நுபுர் பிரசாத்: தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான நுபுர் பிரசாத், பிகார் மாநிலம் 2007-ஆண் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆவார். தற்போது வடக்கு தில்லி மாவட்ட துணை காவல் ஆணையாரான இவர் நேர்மையான அதிகாரி என சக அதிகாரிகளால் பாராட்டப்பட்டவர். இதற்கு முன்பு ஷாதரா மாவட்டத் துணை காவல் ஆணையராகப் பொறுப்பு வகித்தவர்.
மோனிகா பரத்வாஜ்: ஹரியாணா மாநிலம், ரோத்தக்கைச் சேர்ந்தவர். 2009-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இவர், மிகவும் மென்மையாகப் பேசக்கூடியவர். தில்லி காவல் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். 
தென்மேற்கு தில்லியில் கூடுதல் காவல் ஆணையராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர், தன்னுடைய காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவேற்றம் செய்யக்கூடியவர் என்று சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments