சபரிமலையில் தடுக்கப்பட்ட விவகாரம்: காவல் உயரதிகாரிக்கு எதிராக உரிமை மீறல்: கேள்வி எழுப்ப மக்களவையில் அனுமதி கோரிய அமைச்சர்
சபரிமலைக்குச் சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக, கேரளத்தில் பணிபுரிந்து
சபரிமலைக்குச் சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக, கேரளத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திராவுக்கு எதிரான உரிமை மீறல் மீது கேள்வி எழுப்ப அனுமதி அளிக்க வேண்டும் என மக்களவையில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரான பொன் ராதாகிருஷ்ணன், இது தொடர்பாக மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசியதாவது: நவம்பர் 21-ஆம் தேதி சபரிமலைக்கு நான்கு பக்தர்களுடன் சென்றேன். அப்போது, சபரிமலை வளாகத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலக்கல் பகுதியில் நாங்கள் நிறுத்தப்பட்டோம். அப்போது, அந்தப் பகுதியில் இருந்து யாத்ரீகர்கள் அரசுப் பேருந்துகளில் மட்டுமே செல்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கேள்வியுற்றேன். இதன் காரணமாக, அங்கிருந்த முதியோர்கள், குழந்தைகள் உள்பட யாத்ரீகர்களின் வேதனையை நேரில் பார்க்க நேர்ந்தது. சில பக்தர்கள் அரசுப் பேருந்தில் செல்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அப்போது அரசுப் பேருந்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும், தனியார் பேருந்துகள் செல்வதற்கு அனுமதிக்காதது குறித்தும் போலீஸாரிடம் விசாரித்தேன்.
உரிய பதில் கிடைக்கவில்லை. அப்போது, அங்கு பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா குறுக்கிட்டு, அந்தப் பகுதியில் நிலச்சரிவு இருப்பதன் காரணமாக தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படாது என்றும், போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு நான் "அரசுப் பேருந்துகள் மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகின்றன? போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லையே' என்றேன். அதற்கு அவரிடமிருந்து உரிய பதில் இல்லை. எனக்குப் பதில் அளிப்பதற்குப் பதிலாக, "ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா' என என்னிடம் அந்த அதிகாரி கேட்டார். இந்த அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை அவமதிக்கும் ஒரு அடையாளமாகவே இதை எடுத்துக் கொள்கிறேன்.
எனவே, இது தொடர்பான உரிமை மீறல் மீது கேள்வி எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது, சுமித்ரா மகாஜன், "இந்த உரிமை மீறல் நோட்டீஸ் என்னிடம் உள்ளது. இது குறித்துப் பார்க்கிறேன்' எனக் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.