ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட 7 இந்தியர்களை மீட்கக் கோரி தில்லி ஜன்பத்தில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் முன் மாணவர்
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட 7 இந்தியர்களை மீட்கக் கோரி தில்லி ஜன்பத்தில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் முன் மாணவர் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அனைத்திந்திய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐசிடியு, ஜேஎன்யுஎஸ்யு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், கடத்தப்பட்ட இந்தியர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாணத்தில் பாகே சாமல் என்னும் ஊரில் துணைமின் நிலையம் அமைக்கும் பணியை இந்தியாவைச் சேர்ந்த கே.இ.சி. என்கிற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த மே மாதம் 6- ஆம் தேதி இங்கே பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் 7 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை மீட்கக் கோரி தில்லி ஜன்பத்தில் உள்ள வெளிவிவகாரத் துறை அமைச்சகம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: கடத்தப்பட்ட இந்தியர்கள் ஜார்க்கண்ட், பிகார், கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகள்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததாலேயே உயிரைப் பணயம் வைத்து வெளிநாட்டுக்கு அவர்கள் சென்றனர். தலிபான் தீவிரவாதிகளால் அவர்கள் கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது.
ஆனால், அவர்களை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இராக்கில் 2014- இல் கடத்தப்பட்ட 39 இந்தியர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் அவர்கள் உயிரிழக்க நேர்ந்தது.
இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.